வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 28 மார்ச் 2016 (21:16 IST)

இவர்கள் டெல்லிக்கு பதவி கேட்டுதான் வருகிறார்கள் - பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

இதுவரை தமிழக முதலமைச்சர் மட்டும் வந்ததே இல்லை என்றும் அப்படி அவர்கள் வந்தால் தங்களுக்கு பதவி வேண்டும் என்று கேட்டு தான் வருகிறார்கள் என்றும் பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

 
மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ”நமது நாட்டில் பல்வேறு மாநிலங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்து வருகின்றன. ஆனால் ஏற்கனவே வளர்ந்தநிலையில் இருந்த தமிழகம் மட்டும் பின்னோக்கிச் செல்கிறது.
 
40 ஆண்டுகளுக்கு முன்பு டெல்லி அரசு அலுவலகங்களுக்கு சென்று பார்த்தால் முக்கிய பதவிகளில் தமிழர்கள் இருப்பார்கள். ஆனால் அந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இன்று வெளி மாநிலத்தவர்கள் இங்கு வந்து வேலைபார்க்கிறார்கள். 
 
கடந்த 50 ஆண்டுகளில் இங்கு ஒரு தடுப்பணையாவது திராவிட கட்சிகளை சேர்ந்தவர்கள் கட்டி இருப்பார்களா? ரூ.21 ஆயிரம் கோடியில் குளச்சல் துறைமுகம் சீரமைக்கப்படும் என்று மந்திரி நிதின் கட்காரி அறிவித்தார். அந்த திட்டம் முடிக்கப்பட்டால் மதுரை மிகப்பெரிய மாற்றத்தை காணும். ஆனால் அந்த திட்டம் பற்றி இதுவரை தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
 
மத்திய பட்ஜெட் பணிகளின் போது ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்த முதலமைச்சரும் டெல்லிக்கு வந்து, ரெயில்வே பட்ஜெட் மற்றும் பொது பட்ஜெட்டில் எங்கள் மாநிலத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்குங்கள் என்று கேட்டு வாங்கி செல்கிறார்கள்.
 
ஆனால் இதுவரை தமிழக முதலமைச்சர் மட்டும் வந்ததே இல்லை. அப்படி அவர்கள் வந்தால் தங்களுக்கு பதவி வேண்டும் என்று கேட்டு தான் வருகிறார்கள். பிறகு எப்படி தமிழகம் முன்னேறும். கடந்த 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகளின் ஆட்சியை மாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.