புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 11 பிப்ரவரி 2024 (13:23 IST)

நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.! சபாநாயகர் அப்பாவு நேரில் ஆய்வு.!!

assembly
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை உரை நிகழ்த்துகிறார்.
 
கடந்த ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார். 
 
இதனால், ஆளுநர் இருக்கும் போதே, அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
ஏற்கெனவே, பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் தெரிவித்த கருத்துகளால், தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நிலவிய பனிப்போர் மேலும் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு சட்டசபை கூட்டத்தையும் ஆளுநர் முடித்து வைக்காமல் இருந்தார்.
 
இந்த நிலையில் 2024-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் நாளை தொடங்குகிறது.  பிப்ரவரி 19-ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-25-ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்.
 
speaker appavu
இதையடுத்து பிப்ரவரி  20-ம் தேதி முன்பண மானியக் கோரிக்கையும், பிப்ரவரி 21-ம் தேதி முன்பணச் செலவின மானியக் கோரிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளது. 
 
சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ளதை முன்னிட்டு சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் உள்ள கணினி, ஒலிப்பெருக்கி மற்றும் இருக்கைகள் சரியாக உள்ளனவா என்பதை  தலைமைச் செயலகத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது, சட்டமன்றப்பேரவை முதன்மைச் செயலாளர் முனைவர் கி.சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.