வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sasikala
Last Updated : திங்கள், 23 ஜனவரி 2017 (15:29 IST)

தொடரும் போராட்டம்: சென்னையில் போக்குவரத்து முடங்கியது!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 6 நாட்களாக சென்னை மெரீனா கடற்கரையில் மாணவர்கள் நடத்தி வந்த போராட்டத்தை  முடிவுக்கு கொண்டு வர போலீசார் முயற்சித்து வருகின்றனர். இன்று அதிகாலை 3 மணியளவில் மெரினா கடற்கரைக்குள்  நுழைந்த காவல்துறையினர் அங்கிருந்த  போராட்டக்காரர்களிடம் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

 
 
மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், கூட்டத்தை கலைக்க, வலுக்கட்டாயமாக இழுத்து வெளியேற்றினர்.   இதனால், இருதரப்பிலும் வன்முறை வெடித்தது.
 
இதனிடையே, சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளால் மாணவர்களுக்கு ஆதரவாக கொந்தளித்த பொதுமக்கள்  ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, திருவான்மியூர், தரமணி உள்ளிட்ட சென்னையின் முக்கிய சாலைகளில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஆங்காங்கே பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

 
இதனால், பள்ளிகளில் இருந்து குழந்தைகளை அழைத்துச்செல்ல பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடரும்  கலவரத்தால் பெற்றோர்களும், பொதுமக்களும் சாலைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரமே  முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
சென்னை திருவல்லிக்கேணி பெசன்ட் சாலையில் போலீஸ் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் அங்கு பதற்றம்  ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை விரட்ட போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி உள்ளனர். தவிர, வானை  நோக்கிய துப்பாக்கிச் சூடு நடத்தினர். போராட்டக்காரர்கள் கல்வீசியதில் போலீஸ் ஆய்வாளர் ஒருவரின் மண்டை உடைந்தது.

 
இந்நிலையில் கல்வீச்சுக்கு, காரணம் மாணவர்கள் இல்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில்  ஊடுருவிய தேச விரோத சக்திகளே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளனர்.