உணவின்றி தவித்த இளைஞர்களை மசூதியில் தங்க வைத்து உணவளித்த இஸ்லாமியர்கள்!
மிக்ஜாம் புயல் தாக்கத்தினால் பலத்த மழை பெய்த நிலையில் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. பூந்தமல்லியில் வெளியூர் மாவட்டங்களை ஏராளமான வாலிபர்களும், பெண்களும் அறைகளில் தங்கி பணிபுரிந்த வருகின்றனர்.
இந்த நிலையில் மழை தாக்கத்தால் உணவின்றியும் அறைகளுக்கு செல்ல முடியாமலும் தவித்து வந்தனர். இதையடுத்து பூந்தமல்லியில் உள்ள மசூதியில் வாலிபர்களுக்கு கீழ் தளத்திலும் பெண்களுக்கு மேல் தளத்திலும் தங்க வைக்கப்பட்டனர்.
மேலும் அவர்களின் செல்போன் சார்ஜர் போடுவதற்கும் தனியாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி உணவின்றி தவித்த அவர்களுக்கு சூடான சுவையான உணவும் அண்டாக்களில் தயார் செய்து கொடுக்கப்பட்டது.
குறிப்பாக கார்த்திகை மாதம் என்பதால் பெரும்பாலான இந்துக்கள் அசைவ உணவு உண்ண மாட்டார்கள் என்பதால் சேவை உணவை வழங்கினார்கள்.
மேலும் தங்க இடம் செல்போன் சார்ஜ் போட மின் இணைப்பு என கிடைத்த சந்தோசத்தில் இளைஞர்களும், பெண்களும் வட்டம் வட்டமாக அமர்ந்து செல்போன்களுக்கு சார்ஜ் போட்டு கொண்டனர்.
பேரிடர் என வந்து விட்டால் தமிழகத்தில் ஜாதி மதத்திற்கு இடம் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை இங்கு நிரூபிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் தாங்கள் தொழுகை செய்யும் மசூதியில் அனைவரையும் தங்க வைத்து உணவளித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.