சனி, 14 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : வெள்ளி, 9 ஆகஸ்ட் 2024 (22:08 IST)

பட்டாசு வெடிக்க தடை விதித்து கிராம மக்கள் நடைமுறை படுத்திய சம்பவம் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இல்ல விழா முதல் துக்க நிகழ்ச்சி என அனைத்து நிகழ்ச்சிகளையும் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வது இப் பகுதி மக்களின் வாடிக்கையாக உள்ளது.
 
அவ்வப்போது ஏற்படும் விபத்துகளால் காயங்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டாலும் தவிர்க்க முடியாத கலாச்சாரமாக வெடி கலாச்சாரம் மாறிவிட்டது.
 
இதே போல் உசிலம்பட்டி அருகே மலைப்பட்டி கிராமத்தில் உள்ள 300 க்கும் அதிகமான குடும்பங்களில் நடைபெறும் விழாக்கள, நிகழ்ச்சிகளில் வெடி வெடிப்பதை மற்ற கிராம பொதுமக்களை போல வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
 
இந்நிலையில் கடந்த மாதம் இல்ல விழாவின் போது பட்டாசு வெடித்ததில் அதே ஊரைச் சேர்ந்த ஒச்சம்மாள் என்பவர் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி கடந்த 15 நாட்களுக்கு முன்பு பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் இனிமேல் கிராமத்திற்குள் பட்டாசு வெடிக்க கூடாது என முடிவு செய்து கிராம கமிட்டியினர் சார்பில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.
 
தீர்மானத்தை நிறைவேற்றும் வண்ணம், கிராமத்தின் முக்கிய இடங்களில் பட்டாசு மற்றும் வான வேடிக்கைகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் மீறி பட்டாசு வெடித்தால் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பதாதைகளும் வைக்கப்பட்டுள்ளது.
 
பட்டாசு வெடிக்க தடை விதித்ததுடன் அதை நடைமுறை படுத்திய கிராம மக்களை பல்வேறு கிராம மக்களும் பாராட்டி வருகின்றனர்.