குற்றாலம் ரிசார்ட் வந்தது ஏன்? தங்கத்தமிழ்செல்வன் விளக்கம்
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும் என கூறப்படும் நிலையில் 18 எம்.எல்.ஏக்களும் குற்றாலத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே குற்றாலம் கூவத்தூராக மாறுகிறதா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ள நிலையில் குற்றாலம் ரிசார்ட்டில் தங்குவது ஏன் என்பது குறித்து தினகரன் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செலவன் செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ளார்.
தகுதிநீக்க வழக்கில் தீர்ப்பு எங்களுக்கு சாதகமாக வர வேண்டும் என்பதற்காக தாமிரபரணி புஷ்கரத்தில் நீராட வந்ததாகவும் இன்னும் இரண்டு நாட்கள் குற்றாலத்தில் இருந்துவிட்டு பின் சென்னை செல்வோம் என்றும் தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
மேலும் தாமிரபரணி மகாபுஷ்கர விழாவில் புனித நீராடிவிட்டு குற்றாலத்தில் ஓய்வு எடுக்கவே வந்ததாகவும், எங்கள் வருகைக்கு வேறு எந்த காரணமும் இல்லை என்றும் தங்கத்தமிழ்ச்செல்வன் மேலும் கூறியுள்ளார். மேலும் தற்போது குற்றாலத்தில் 20 பேர் இருப்பதாகவும் விரைவில் இன்னும் 2 பேர் வந்து விடுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.