வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : திங்கள், 3 ஜூலை 2017 (09:55 IST)

முதல்வர் கனவில் தம்பிதுரை: கோபத்தில் கொங்கு மண்டலம்!

முதல்வர் கனவில் தம்பிதுரை: கோபத்தில் கொங்கு மண்டலம்!

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் தினமும் ஏதாவது ஒரு பிரச்சனை வெடித்துக்கொண்டு தான் இருக்கிறது. ஏற்கனவே ஒரு ஓட்டுக்கு மூன்று முதலமைச்சர்கள் என எதிர்க்கட்சிகள் கிண்டலடிக்கும் நிலையில் நான்காவது முதலமைச்சராக தான் வரவேண்டும் என தம்பிதுரை விரும்புவதாக தகவல்கள் வருகின்றன.


 

 
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அடுத்த முதலமைச்சர் யார் என்ற பட்டியலில் ஓபிஎஸ், எடப்பாடி ஆகியோருடன் ரேஸில் தம்பிதுரையும் இருந்தார். ஆனால் இதனை மத்தியில் உள்ளவர்கள் ரசிக்கவில்லை. அவர்களின் தேர்வு ஓபிஎஸாக தான் இருந்தது.
 
ஓபிஎஸ் முதல்வரான பின்னர் அவரை ராஜினாம செய்ய வைத்து சசிகலா முதல்வராக முயற்சித்தார். இதற்கு தம்பிதுரை பெரிதும் உதவியதாக கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்ல எடப்பாடி முதல்வராக பதவியேற்றார்.
 
ஆனால் இந்த முறையும் தம்பிதுரை தான் முதல்வராக காய்கள் நகர்த்தியதாக கூறப்படுகிறது. ஆனால் எடப்பாடிக்கு ஆதரவாக பாஜகவில் இருக்கும் ஆளுநரின் தயவில் தான் எடப்பாடிக்கு மத்தியில் இருப்பவர்கள் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி சசிகலா குடும்பத்துக்கு எதிராக தனது வேலைகளை ஆரம்பித்துள்ளதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சசிகலாவுக்கு ஆதரவாக பேசி முதல்வர் பதவியை எப்படியாவது அடைய வேண்டும் என தம்பிதுரை விரும்புவதாக அதிமுகவினர் மிகவும் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளனர்.
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சர்கள் சசிகலா குடும்பத்துக்கு எதிராக பேச ஆரம்பித்தபோது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையும் சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து அவருக்கு எதிராக பேச ஆரம்பித்தார்.
 
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு அதிமுக பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த விவகாரத்தில் தம்பிதுரை தெரிவித்த கருத்து எடப்பாடி ஆதரவு கொங்கு மண்டலத்தில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்பிதுரை முதல்வர் கனவில் தான் இப்படி செய்கிறார் என அவர்கள் பேச ஆரம்பித்துள்ளனர்.
 
சிறையில் உள்ள சசிகலாவை கடந்த வாரம் சந்தித்த தம்பிதுரை அவரிடம் ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு வழங்குவது குறித்து பேசினார். இந்த சூழலில் பாஜகவுக்கு குடியரசுத்தலைவர் தேர்தலில் அதிமுக ஆதரவு அளிப்பதாக தன்னிச்சையாக அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
 
எடப்பாடி பழனிச்சாமியின் இந்த அறிவிப்பு சசிகலா குடும்பத்துக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. அதன் பின்னர் பேட்டியளித்த தம்பிதுரை, பாஜக வேட்பாளரை ஆதரிப்பதற்கு சசிகலா ஒப்புதல் கொடுத்தார். பா.ஜ.கவுக்கு ஆதரவு என்பது சசிகலாவும் சேர்ந்து எடுத்த முடிவுதான் என எடப்பாடி அணியில் உள்ளவர்களை அதிர வைத்தார்.
 
தம்பிதுரையின் இந்த பேட்டிக்கு எடப்பாடி அணியில் இருந்து ரியாக்‌ஷன் கடுமையாக இருந்தது. எம்பிக்கள், எம்எல்ஏக்களை விட்டு தம்பிதுரைக்கு எதிராக ஊடகத்தில் பேச வைத்தது எடப்பாடி அணி. எடப்பாடி பழனிச்சாமி தான் முதல்வராக தொடர வேண்டும் என கொங்கு மண்டலத்தில் உள்ளவர்கள் தீவிரமாக செயல்படுகின்றனர்.
 
விரைவில் எடப்பாடி பழனிசாமி அரசின் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர சசிகலா குடும்பம் முயற்சிக்கும், அப்போது தாம் முதல்வராகிவிடுவோம் என தம்பிதுரை திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக இப்போதே சில வேலைகளை ரகசியமாக தம்பிதுரை செய்து வருவதாக தகவல்கள் வருகிறது.