தைப்பூச திருவிழா: பழனியில் குவியும் பக்தர்கள்! – என்னென்ன விஷேசங்கள்?
தைப்பூசத்தை முன்னிட்டு பழனி கோவில் பக்தர்கள் லட்சக்கணக்கில் நாளுக்கு நாள் குவிந்து வரும் நிலையில் பழனி விழாக்கோலம் பூண்டுள்ளது.
தைப்பூச திருவிழா எதிர்வரும் பிப்ரவரி 5ம் தேதி கொண்டாடப்படுகிறது. தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாள் என்பதால் அன்று முருகபெருமானின் அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், சுவாமிமலை, பழமுதிர்சோலை, திருப்பரங்குன்றம், திருத்தணி ஆகிய அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டமாக வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
முக்கியமாக தைப்பூசம் பழனியில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தை முன்னிட்டு இன்று முதலே பழனியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. பலரும் பால்குடம், காவடி எடுத்து தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
தைப்பூச திருவிழாவிற்காக தினம்தோறும் பெரியநாயகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தினம்தோறும் காலையிலும், மாலையிலும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி – தெய்வானை சகிதம் வெள்ளி யானை, ஆட்டுக்கிடா உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வருகிறார்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 6ம் தேதி வரை 5 நாட்களுக்கு தங்கரத புறப்பாடு பழனி முருகன் கோவிலில் நிறுத்தப்பட்டுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறுகிறது. திருக்கல்யாணத்தை தொடர்ந்து மணக்கோலத்தில் வெள்ளி ரத புறப்பாடு நடைபெற உள்ளது.
தைப்பூசம் அன்று சிகர நிகழ்வாக தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள் பழனியில் குவிந்து வருகின்றனர்.
Edit by Prasanth.K