ரூ 7500 ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்!
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக 7,500 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான செய்முறை தேர்வு போன்றவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதன் காரணாமாக 7500 ரூபாய் தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
மேலும் ஜனவரி 28-ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு பள்ளிகள் இயக்கப்பட உள்ளது. அதேபோல, ஜனவரி 22-ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு 17B-விதியின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
ஏற்கெனவே ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பணிக்கு திரும்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையும் சுட்டிக்காட்டிய பள்ளிக்கல்வித்துறை, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.