1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 ஜூன் 2020 (16:10 IST)

2 மாதத்திற்கு 10 ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு??

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
 
தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனா ஊரடங்கால் ஒத்தி வைக்கப்பட்டன. பிறகு அடுத்த மாதம் ஜூன் முதல் தேதியிலிருந்து பத்தாம் வகுப்பு தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 
  
ஆனால் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நாளே தேர்வுகள் தொடங்குவதில் உள்ள சிரமங்களை பல கட்சிகளும், மக்களும் கூறி வந்தனர். இந்நிலையில் இன்று முதலைமைச்சருடன் ஆலோசித்த கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தேர்வுகளை ஒத்தி வைத்து புதிய தேர்வு அட்டவணையை வழங்கியுள்ளார்.   
 
அதன்படி ஜூன் 15 ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்க இருக்கின்றன. ஜூன் 15 – மொழிப்பாடம், ஜூன் 17 – ஆங்கிலம், ஜூன் 18 – கணிதம், ஜூன் 22 – அறிவியல், ஜூன் 24 – சமூக அறிவியல், மேலும் ஜூன் 20 விருப்பப்பாடமும், ஜூன் 25 தொழில்கல்வி தேர்வுகளும் நடைபெறும்.    
 
மேலும் விடுபட்ட 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 16 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பு எஞ்சிய தேர்வு ஜூன் 18 ஆம் தேதியும் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
 
இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்கக் கோரி ஆசிரியர் சங்கம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் வரும் 15 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் 2 மாதங்கள் தள்ளி வைக்கக் கோரியுள்ளனர்.