இளம் பெண்ணை துடிதுடிக்கக் கொலை செய்து உடலை மழைநீர் கால்வாயில் வீசிய உறவினர்

murder
Suresh| Last Updated: செவ்வாய், 7 ஏப்ரல் 2015 (13:45 IST)
சேலையூரில் கொலை செய்யப்பட்ட இளம் பெண் அடையாளம் தெரிந்தது. பணத்திற்காக அவரை உறவினரே கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.
சென்னையை அடுத்துள்ள சேலையூருக்கு அருகிலுள்ள தேணுகாம்பாள் நகர் 1 ஆவது மெயின்ரோட்டில் நேற்று முன்தினம் காலை இளம்பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் மழைநீர் கால்வாயில் பிணமாகக் கிடந்தார்.

இது குறித்த தகவல் அறிந்து அங்குவந்த சேலையூர் காவல்துறையினர் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பது குறித்து நேற்று அடையாளம் தெரிந்தது. கொலை செய்யப்பட்ட பெண் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள அம்மன்கோவில் தெருவை சேர்ந்த சிங்காரம் என்பவரது மகள் ஜெரினா மரியா. அவருக்கு வயது 27 என தெரியவந்தது.

இவர் சாந்தோமில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை பார்த்து ஜெரினா மரியாவின் தாயார் அல்போன்சா அடையாளம் காட்டினார். மேலும், ராயப்பேட்டை மருத்துவமனையில் அவரது சகோதரர் உடலை பார்த்து உறுதி செய்தார்.
கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டு வெளியில் சென்ற ஜெரினா மரியா வீடு திரும்பவில்லை. இது குறித்து கொருக்குபேட்டை காவல்துறையினரிடம் அல்போன்சா புகார் செய்தார்.

இந்த கொலை தொடர்பாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் சேலையூர் காவல்துறை உதவி ஆணையர் ராஜேந்திரன் தலைமையில் தனிப்படை காவலர்கள் நடத்திய விசாரணையில் ஜெரினா மரியாவை அவரது நெருங்கிய உறவினர் அழைத்து சென்றது தெரியவந்தது.
அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. ஜெரினா மரியாவின் தூரத்து உறவினர் ஹென்ரி ராபர்ட் அவருக்கு வயது35. பி.பி.ஏ. பட்டதாரியான இவர் மனைவியை விவாகரத்து செய்தவர்.

பேஸ் புக் மூலம் ஜெரினா மரியாவிற்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அவர் உறவினர் என தெரிந்ததால், இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்த ஹென்ரி ராபர்ட் அவ்வப்போது செலவுக்கு ஜெரினா மரியாவிடம் பணம் வாங்கி வந்துள்ளார்.

ஹென்றி ராபர்ட் சொந்தமாக தொழில் செய்வதாகக் கூறி ஜெரினா மரியாவிடம் இருந்து ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்தை வாங்கியதக் கூறப்படுகிறது. இந்த பணத்தை கேட்டு அவர் அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து ஹென்றி ராபர்ட் அவரிடம் பணம் தருவதாக வேளச்சேரியில் உள்ள ஜெரினா மரியாவின் சகோதரி நிலம் உள்ள இடத்திற்கு வரவழைத்து அங்கு கையை கட்டி கழுத்தை கயிற்றால் இறுக்கி அவரை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் உடலை அங்கேயே வைத்து விட்டு மறுநாள் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை அந்த இடத்தில் இருந்த காவலாளியை வேறு வேலைக்கு அனுப்பி விட்டு காரில் ஜெரினா மரியாவின் உடலை ஏற்றி வந்து மாடம்பாக்கம் தேனுகாம்பாள் நகரில் உள்ள மழைநீர் கால்வாயில் வீசியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :