ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 19 ஆகஸ்ட் 2020 (17:49 IST)

சென்னையில் மதுக்கடைகள் திறப்பு; எதிர்பார்த்த அளவுக்கு விற்பனை இல்லை

சென்னையில் கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு மதுபானக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், முதல் நாளில் 33.5 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனை நடந்துள்ளது.
 
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மாநில அரசின் டாஸ்மாக் நிறுவனத்தால் நடத்தப்படும் மதுபான கடைகள் மார்ச் மாதம் 24ஆம் தேதியோடு மூடப்பட்டன. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் உள்ள 4,550 கடைகள் மே மாதம் 7ஆம் தேதி திறக்கப்பட்ட நிலையில், சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆகஸ்ட் 18ஆம் தேதி திறக்கப்பட்டன.
 
பல மாதங்களுக்குப் பிறகு கடைகள் திறக்கப்படுவதால் பெரிய அளவில் கூட்டம் வரலாம் என்ற எதிர்பார்ப்பில் எல்லா டாஸ்மாக் கடைகளிலும் கடைக்கு வெளியில் ஷாமியானா பந்தல் போடப்பட்டது. ஆட்கள் வரிசையில் நிற்பதற்காக கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டன. கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக ஒரு கடைக்கு ஒரு நாளைக்கு 500 டோக்கன் மட்டுமே வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. தவிர ஆட்கள் தள்ளி தள்ளி நிற்க வேண்டும் என்பதற்காக சுண்ணாம்பினால் வட்டங்களும் வரையப்பட்டன.
 
ஆனால் செவ்வாய்க் கிழமையன்று கடைகள் திறக்கப்பட்டபோது பெரிய கூட்டம் ஏதும் திரளவில்லை. மைலாப்பூர் போன்ற சில இடங்களில் மட்டும் சில கடைகளில் நுகர்வோர் வரிசைகளில் நின்று வாங்கிச் சென்றனர். பெரும்பாலான இடங்களில் கூட்டம் இல்லை என்பதோடு, 400 டோக்கன்கூட விநியோகமாகவில்லை.
 
"சென்னை விற்பனை மண்டலம் என்பது 7 மாவட்டங்களை உள்ளடக்கியது. இதில் மொத்தமாக 33.5 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானது. சமீபத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலைகள் 16 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டன. அதனைக் கழித்துவிட்டால் சுமார் 29 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையாகியிருப்பதாகச் சொல்லலாம். இது வழக்கமான விற்பனைதான்" என்கிறார் டாஸ்மாக் அதிகாரி ஒருவர்.
 
சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 660 கடைகளில் சுமார் 20 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்திருக்கிறது. இதுவும் வழக்கமான விற்பனை அளவுதான். "சென்னையில் வசித்துவந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள், பிற மாவட்டத் தொழிலாளர்கள் டாஸ்மாக்கின் முக்கியமான வாடிக்கையாளர்கள். அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டதால்தான் பெரிய கூட்டம் ஏதும் இல்லை" என்கிறார் ஒரு விற்பனையாளர்.
 
சென்னையில் உள்ள பல கடைகளில் பல மீட்டர் நீளத்திற்கு கட்டைகளால் தடுப்பு அமைக்கப்பட்டு, 100 மீட்டர் தூரத்தில் டோக்கன் கொடுப்பவர் அமரவைக்கப்பட்டிருந்தனர். ஆனால், ஒரே நேரத்தில் 5-6 பேர் மட்டுமே கடைகளுக்கு வந்தனர். காலை 10 மணியளவில் விறபனை துவங்கிய நிலையில், கூட்டம் இருந்த கடைகளில்கூட 11.30 மணியளவில் வரிசைகளில் ஆள் இல்லை. புதன்கிழமையன்றும் இதேபோன்ற நிலையே பெரும்பாலான கடைகளில் காணப்படுகிறது.
 
தமிழ்நாட்டில் சராசரியான ஒரு நாளில் 130 முதல் 140 கோடி ரூபாய் அளவுக்கு டாஸ்மாக் கடைகளின் மூலம் மதுபான விற்பனை நடைபெறுகிறது.