புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 23 செப்டம்பர் 2019 (18:36 IST)

வெளுக்க போகும் பருவமழை!: தயாராகும் அமைச்சர்கள்!

தமிழகத்தில் பருவமழை தொடங்க இருப்பதால் இதுகுறித்த முதல்வரின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

தற்போது தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியிருக்கிறது. இது எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவ மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ள தேவையான ஆலோசனைகளை வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையில் அமைச்சரவை கூடியது.

ஏற்கனவே கஜா புயல் ஏற்படுத்திய தாக்கங்களிலிருந்து தமிழகம் நிறைய படிப்பினைகளை கற்றுக்கொண்டுள்ளது. எனவே அதீத மழைப்பொழிவினால் ஏற்படும் வெள்ளப்பெருக்கை கையாளுதல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களுக்கு மழை காலங்களில் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால் ரேசன் கடைகளில் முன்கூட்டியே பொருட்களை சேமித்து வைக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் அவசரகால சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை அதிகப்படுத்துதல், நோய் தொற்று பராவாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கைகள் குறித்தும் அந்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர்.