திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2020 (10:14 IST)

அதிமுக ஆட்சியை இழக்க வேண்டி வரலாம்! – பாஜக பிரமுகர் எச்சரிக்கை!

இந்துக்களுக்கு எதிரான செயல்பாடுகள் மீது அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஆட்சியை இழக்கும் என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சமீப காலமாக தமிழகத்தில் மத ரீதியான பிரச்சினை சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் பெரும் விவாதமாக மாறி வருகிறது. கந்த சஷ்டி கவசம் குறித்து யூட்யூபில் அவதூறாக பதிவிட்டது, அதை தொடர்ந்த கைதுகள், பெரியார் சிலை சேதம், கோவையில் கோவில்கள் அவமானப்படுத்தப்பட்டது என பல்வேறு செயல்களால் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதரீதியான பிரச்சினைகளை தூண்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த தொடர் சம்பவங்கள் குறித்து பேசியுள்ள பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் “இந்துக்களுக்கு எதிராக கருத்து சொல்பவர்கள், இந்து கோவில்களை சேதப்படுத்துபவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு சுதந்திரம் அளிக்க வேண்டும். தமிழகத்தில் இந்துக்களுக்கு எதிரான செயல்பாடுகள் மீது சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் உள்துறை அமைச்சகத்தை நாட தமிழக பாஜக தயங்காது” என்று கூறியுள்ளார்.

மேலும் “இந்துக்களுக்கு எதிரான செயல்பாடுகளை அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் இருந்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக அரசு தோல்வியடைந்து ஆட்சியை இழக்கும்” என்றும் கூறியுள்ளார்.