வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 13 ஜனவரி 2015 (16:32 IST)

தமிழ்நாடு மட்டும்தான் தாய்மொழியை நாட்டின் பெயராக கொண்டது - தருண் விஜய்

தமிழ்நாடு மட்டும்தான் தாய்மொழியை நாட்டின் பெயராக கொண்டது என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் கூறியுள்ளார்.
 
திருவள்ளுவரின் சிறப்புகளை எடுத்துரைக்கும் விதமாக ’திருவள்ளுவர் திருப்பயணம்’ என்ற பெயரில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை உத்தரகாண்ட் மாநில பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் பிரசாரப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 
 

 
இப்பிரசாரப் பயணம் தொடர்பாக கன்னியாகுமரியில் இருந்து தூத்துக்குடி சென்ற தருண் விஜய் இடையிலிருந்த எட்டயபுரம் பாரதியார் இல்லத்திற்குச் சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.
 
பின்னர் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தருண் விஜய்க்கு பாராட்டு விழா நடந்தது. அதில் அவர் கலந்து கொண்டு பேசிய தருண் விஜய், “தமிழர்களின் அன்பு கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். உலகத்திலேயே தாய் மொழியை நாட்டின் பெயராக கொண்டது தமிழ் நாடுதான்.
 
திருக்குறள் நமது நாட்டின் அடையாளம். பாராளுமன்றத்திலும், வட மாநில நண்பர்களையும் திருக்குறள் படியுங்கள் என கேட்டுக் கொண்டு வருகிறேன். நாம் அனைவரும் மனிதத் தன்மையை அடைய திருக்குறளை படிக்க வேண்டும்.
 
உலகப் பொதுமறையான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு பாராளுமன்றத்தில் சிலை கிடையாது. அவருக்கு சிலை வைத்தால்தான் பாராளுமன்றம் முழுமை பெறும். இதற்காக நான் தொடர்ந்து போராடுவேன்” என்று தெரிவித்தார்.