ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: திங்கள், 15 ஏப்ரல் 2024 (14:37 IST)

சிறுபான்மை மக்களுக்கு பாஜக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை-காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை

தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் உப்பு சத்தியாகிரக நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. 
 
பின்னர் நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை சர்தார் வேதாரத்தினம் பிள்ளையின் பேரன் வேதரத்தின பிள்ளை வழங்கினார்.
 
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வேதாரணியம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஜங்ஷன் பூக்கடை பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். 
 
மாநில தலைவர் ஆறுமுகம், தண்டியாத்திரை குழு தலைவர் சக்தி செல்வ கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு தலைவர்கள்  சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 
பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்  அவர் கூறியதாவது:-
 
இந்தியாவில் உள்ள விளிம்பு மக்களுக்கு, பெண்களுக்கு சிறுபான்மை மக்களுக்கு சரியான பாதுகாப்பு இந்த பாஜக ஆட்சியில் இல்லை. 
 
இதுதான் பத்தாண்டு காலம் பாஜகவின் லட்சனமாகும். உப்பு சத்தியாகிரகத்தை பற்றி பிரதமர் மோடி, அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டும்.இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களை பற்றி மோடியும், அண்ணாமலையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
 
பாஜக வெறுப்பு அரசியலை தமிழகத்தில் புகுத்த பார்க்கிறது. 
 
இதனை ஒரு நாளும் தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.ஜாதி, மத அரசியலை இந்திய மக்கள் ஒரு பொழுதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
 
தமிழ் இன துரோகி அண்ணாமலை தான். கர்நாடக எம் பி தமிழர்களை பற்றி பேசும் பொழுதுஅதற்கு அண்ணாமலை பதில் ஏதும் சொல்லாமல் இருப்பது ஏன்?தமிழகத்தின் உரிமை எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறதோ  அங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி நிச்சயம் குரல் எழுப்பும், காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக அரசுக்கு,காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும். ஒரு நாளும் உரிமையை விட்டுக் கொடுக்காது.
 
இந்த பாராளுமன்ற தேர்தல் மூலம் இந்தியாவிலிருந்து பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும்.
 
இந்தியா கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். இவ்வாறு செல்வப் பெருந்தகை கூறினார்.