தமிழக சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யுங்க - தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

K.N.Vadivel| Last Updated: வியாழன், 4 ஜூன் 2015 (13:14 IST)
ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி நேரலையில்
ஒளிபரப்பும் போது, தமிழகத்தில் மட்டும் பேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பத் தயங்குவது சரியல்ல என ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழக சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்யும்படி
சட்டப் பேரவைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் அரசுத் தரப்பில் பதில் மழுப்பலாகவே கூறப்பட்டுள்ளது.
தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தங்களின் பிரதிநிதியாக அனுப்பி வைக்கப்பட்ட சட்டமன்ற
உறுப்பினர்கள் எவ்வாறு மக்கள் பணியாற்றுகிறார்கள்? என்பதை அறிந்து கொள்ளும் உரிமை தமிழக மக்களுக்கு உண்டு. இதற்கு ஒரே வழி தமிழக சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்வது தான்.

அரசு கம்பிவடத் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கப்பட்ட போது, அதன்வழியாக தமிழக சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
தமிழக அரசின் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் பேரவை நிகழ்ச்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் மட்டும் தனியார் தொலைக் காட்சிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

தொலைக் காட்சிக்கு வழங்கப்படும் தொகுப்பில் அரசு ஆதரவு பேச்சுக்கள் மட்டுமே இடம் பெறுகிறது. தமிழக அரசுக்கு எதிரான விமர்சனங்கள் இடம் பெறாது. இது சட்டப் பேரவை நடவடிக்கைகளின் உண்மை நிலையை பிரதிபலிக்கவே பிரதிபலிக்காது.
சட்டப் பேரவையில் முக்கியமான பிரச்சினைகள் குறித்து பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதும், அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் அவையிலிருந்து
வெளியேற்றப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது.

மக்களவை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. ஆந்திரா, கேரளா ஆகிய சட்டப்பேரவை நிகழ்ச்சிகளும் நேரலையில் ஒளிபரப்படுகின்றன. கர்நாடக சட்டப் பேரவை நிகழ்ச்சிகள் எந்தவித வெட்டும் செய்யப்படாமல் அப்படியே தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படுகின்றன. ஆனால், தமிழகம் மட்டும் பேரவை நிகழ்ச்சிகளை நேரலையில் ஒளிபரப்பத் தயங்குவது சரியல்ல.
சட்டப் பேரவை நிகழ்வுகளை படம் பிடிப்பதற்கான கட்டமைப்புகள் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அதை நேரலையில் ஒளிபரப்ப கூடுதலாக ஏற்படும் செலவு பெரிய அளவில் இருக்காது.

அதே நேரத்தில், சட்டப் பேரவை நிகழ்வுகள் நேரலையில் ஒளிபரப்பபடும் போது, அவையில் நடப்பதை மக்களால் உடனுக்குஉடன் தெரிந்து கொள்ள வாயப்பாக அமையும். மேலும், உறுப்பினர்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என்பன உள்ளிட்ட பல நன்மைகள் ஏற்படும்.

எனவே, சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப தமிழக அரசும், பேரவைச் செயலகமும் முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :