பாடகர் கோவனுக்கு ஜாமீன்


Ashok| Last Modified திங்கள், 16 நவம்பர் 2015 (20:04 IST)
மூடு டாஸ்மாக்கை மூடு என்ற பாடலை பாடிய பாடகர் கோவனுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

 
 
 
மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்தவரும் பாடகருமான கோவன் “மூடு டாஸ்மாக்கை மூடு’’ என்ற பாடலைப் திருச்சியில் பல்வேறு இடங்களில் பாடியுள்ளார. இந்த பாடல் கீற்று உள்ளிட்ட பல்வேறு வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், பாடகர் கோவனை திருச்சியில் உள்ள அவரது வீட்டில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த மாதம் 30 ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்தனர். அவர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று போலீஸார் தெரிவித்ததற்கு உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
இதனை தொடர்ந்து, பாடகர் கோவன் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு இன்று தாக்கல் செய்யபட்டது. இந்த மனுவை விசாரித்த  நீதிபதி என்.ஆதிநாதன், கோவனுக்கு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
 
அப்போது, ஐந்தாயிரம் ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்றும் விசாரணைக்கு தேவைப்படும்போது காவல்துறையினர் அழைக்கும் பட்சத்தில் கோவன் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :