சுவாதி வழக்கில் தொடர்புடைய பெண்ணை தேடும் கூலிப்படை? : ஆடியோ கேளுங்கள்

Swathi
Murugan| Last Modified வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (09:19 IST)
சென்னையில் படுகொலை செய்யப்பட்ட, சுவாதி கொலை வழக்கில் தொடர்புடைய பெண்ணை கொலை செய்ய கூலிப்படை ஏவப்பட்டுள்ளதாக தமிழச்சி என்பவர் பேஸ்புக்கில் கட்டுரை வெளியிட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராம்குமார்தான் குற்றவாளி என்று போலீசார் கூறி வரும் வேளையில், இந்த கொலையை நான் செய்யவில்லை என்று, நேற்று ராம்குமார் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
 
தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கில், பல மர்மங்களும் திருப்பங்களும் நிறைந்து காணப்படுகிறது. 
 
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, தமிழச்சி என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை தொடர்ந்து கூறி வருகிறார். சமீபத்தில் அவர் ஒரு பெண் பேசும் ஆடியோவை வெளியிட்டு சில தகவல்களை கூறியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
 
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு கேட்கும் ஆடியோ அது. அதன் அரசியல் அதிர்வை நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் அதிலிருந்து ஒரு சில வரிகள்.
 
".... என்னை எப்படியாவது கொன்னுடனும்னு அந்த இரண்டு பேரும் முயற்சி பண்ணாங்க. அதுவும் ரம்ஜான் பண்டிகை அன்னைக்கு சாகடிக்கனும்னு திட்டம் போட்டாங்க. அவங்க அனுப்பிய கூலிப்படை கிட்ட இருந்து இரண்டு முறை தப்பிச்சிட்டேன்...."
 
அப்படி சொல்கிற பெண் முஸ்லிம் கிடையாது. அவர் இந்து. அவரை கொலை செய்ய அனுப்பிய கூலிப்படையினர் காவல்துறையைச் சேர்ந்த சிலரால் அனுப்பப்பட்டவர்கள் என்று கூறுகிறார் அந்த பெண்.
 
சுவாதியின் படுகொலை தொடர்பாக தமிழ்நாட்டு காவல்துறையினரால் தகவல் விசாரணை அடிப்படையில்தான் இப்பெண் விசாரிக்கப்பட்டார். அவரும் சுவாதி குறித்து அவருக்கு தெரிந்த ததகவல்களை கூறியபின் அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை செய்யாமல் அப்பெண்ணையும் கொலை செய்துவிட காவல்துறையினரில் சிலர் முயன்றிருக்கின்றனர்.
 
அதற்கு பிறகு வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற அப்பெண் பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளார். அவற்றில் இந்திய தேசிய இறையாண்மைக்கு எதிராக மதக் கலவரங்களை தூண்டுவதற்கான அரசியல் நகர்வுகளை அவற்றில் பார்க்க முடிகிறது.
 
தமிழக அரசு இதில் தலையிட்டு நடக்கும் உண்மைகளை கண்டறிய விசாரணை நடத்த முற்படுமானால் சுவாதி படுகொலை விசாரணை வேறு மாநிலத்தில் நடத்த உத்தரவாதம் கொடுத்தால் விசாரணைக்கு உரிய அனைத்து ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பிக்க தயார்.
 
இன்னொரு மிகப்பெரிய ஆபத்து ஒன்றுள்ளது. காவல்துறையினர் கொலை முயற்சியில் இருந்து தப்பியோடிய அப்பெண் தமிழ்நாட்டிற்குள் இருக்கும் தன் குடும்பத்தினருக்கு அசம்பாவிதம் ஏதேனும் நடந்து விடுமோ என்ற மிகுந்த பதட்டத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் கடந்து கொண்டிருக்கிறார். அதேபோல் அவர் எந்த நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்பதை அறிந்து அங்கே அப்பெண்ணை கொல்வதற்கான நடவடிக்கைகளை சமூக விரோதிகள் மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது.
 
ஒரு அப்பாவி தண்டிக்கப்படக்கூடாது என்பதில் அப்பெண் துணிந்து நிற்கிறார். சாதிக்காக மதத்திற்காக ஆணவப்படுகொலைகள் நடக்கவிடக் கூடாது. இந்திய இறையாண்மைக்கு எதிராக இயங்கும் சமூக விரோதிகளை தொடர்ந்து இயங்கவிடக் கூடாது என்பதற்காகவும், பெண்களை கொலை செய்வதன் மூலம் நடத்த முற்படும் மதகலவரங்களையும் அதற்காகவே இயங்கும் கூலிப்படைகளையும் ஒழித்துக் கட்ட தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதற்காக நான் உங்கள் முன் நிற்கிறேன்.
 
என்னிடம் இருக்கும் அனைத்து ஆதாரங்களையும் ப்ரெஞ்ச் மனித உரிமை மீறல் அமைப்பினர் ப்ரெஞ்ச் வழக்கறிஞர் சங்கம் மற்றும் ப்ரெஞ்ச் பெண்கள் அமைப்பினரிடம் சமர்ப்பித்துள்ளேன்.
 
என் உயிருக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டாலே அல்லது நானும் படுகொலை செய்யப்பட்டாலோ மேற்கூறிய மூன்று அமைப்பினரும் மேற்கொண்டு நீதிமன்றத்தின் மூலம் உண்மைகளை அம்பலப்படுத்துவார்கள்.
 
தமிழக மக்களே!
 
வாழ்வா? சாவா? என்ற போராட்டத்திற்குள் நுழைந்துவிட்டோம். நாங்கள் அரசிடம் மண்டியிடவில்லை. உங்கள் முன் நிற்கிறோம். மக்கள் சக்தியாகிய நீங்கள் மற்றும் சமூக அமைப்புகள் எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டிக் கொள்கிறோம்” 
 
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளியிட்டுள்ள ஆடியோவை கேளுங்கள்:
 


இதில் மேலும் படிக்கவும் :