செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2016 (11:08 IST)

அரசியல் மோதலை நோக்கி செல்லும் சுவாதி விவகாரம்: எச்.ராஜா உருவ பொம்மையை எரித்த வி.சி.கட்சியினர்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட இளம்பெண் சுவாதி விவகாரம் தற்போது இரு அரசியல் தலைவர்களிடம் மோதல் போக்கை உருவாக்கி உள்ளது.


 
 
இந்த கொலை வழக்கில் தலித் இளைஞர் ராம்குமார் கைது செய்யப்பட்டார். இதனால் தலித் அமைப்புகள் மறைமுகமாக ராம்குமாருக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வந்தன. கொலை செய்யப்பட்ட பெண் பிராமண பெண் என்பதால் பிராமணர்கள் சிலர் சுவாதிக்கு ஆதரவாகவும், அவர் பிலால் மாலிக் என்ற முஸ்லீம் இளைஞர் ஒருவரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கூறி வந்தனர்.
 
இந்நிலையில் இந்த விவகாரத்தில் சமீபத்தில் நுழைந்து கருத்து சொல்ல ஆரம்பித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சுவாதி முஸ்லீம் மதத்திற்கு மாற இருந்தார், அவர் ரமலான் நோன்பு இருந்தார். இவை ஆர்.எஸ்.எஸ். தரப்பினருக்கு தெரியும் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
 
இவரின் இந்த கருத்துக்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கடுமையாக கண்டனம் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ். சேவை அமைப்பை பற்றி அவதூறாக பேசியதற்கு அவர் மீது வழக்கு தொடரப்படும் எனவும் எச்சரித்தார்.
 
மேலும் ராம்குமாருக்கும், திருமாவளவனுக்கும் என்ன தொடர்பு, இந்த வழக்கு பற்றி திருமாவளவனுக்கு நிறைய தகவல்கள் தெரியும், காவல்துறை அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். தேவைப்பட்டால் திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என தொடர்ந்து அவருக்கு எதிராக பேசி வந்தார் எச்.ராஜா.
 
இந்நிலையில், சுவாதி கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் எச்.ராஜா, திருமாவளவனை தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கெளரி சங்கர் தலைமையில் இன்று காலை கொரட்டூர் டி.வி.எஸ். லுக்காஸ் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி, எச்.ராஜாவின் உருவ பொம்மையை எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 
தகவலறிந்து வந்த காவல்துறையினர் எரிந்து கொண்டிருந்த உருவ பொம்மையை அணைத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். சுவாதி விவகாரம் இந்த இரு தலைவர்கள் மற்றும் அவரது தொண்டர்களிடம் மோதலை உருவாக்கி உள்ளது துரதிர்ஷ்டவசமாக பார்க்கப்படுகிறது.
 
இவர்கள் இருவரும் மாறி மாறி சுவாதி கொலை வழக்கில் கருத்து சொல்வதையும், யூகத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவதை விட, தங்களுக்கு ஏதாவது தகவல் தெரிந்தால் அதனை நேரடியாக சுவாதி கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரிகளிடம் தெரிவிப்பதே அமைதியான சூழலை உருவாக்கும்.