செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2016 (08:32 IST)

எஸ்விஎஸ் கல்லூரி மாணவ -மாணவிகளுக்கு அரசு கல்லூரியில் இட ஒதுக்கீட்டு ஆணை

எஸ்விஎஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியில் படித்த 111 மாணவ - மாணவிகளுக்கு அரசு கல்லூரியில் சேருவதற்கான ஆணை வழங்கப்பட்டது.


 

 
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள எஸ்விஎஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் படித்த பிரியங்கா, சரண்யா, மோனிஷா ஆகிய 3 மாணவிகள் கல்லூரிக்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
 
இதைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக பெற்றோர்கள் மாணவர்கள் உள்ளிட்டவர்களின் போராட்டம் காரணமாக கல்லூரிக்கு  "சீல்" வைக்கப்பட்டது.
 
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எஸ்விஎஸ் மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களை, சென்னையில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரிக்கு மாற்ற உத்தரவிட்டார்.
 
இந்த உத்தரவின்படி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் சிறப்பு கலந்தாய்வு நேற்று நடைபெற்றது.
 
இந்த கலந்தாய்வில் எஸ்விஎஸ் கல்லூரியில் பயின்றுவரும் மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
 
இது குறித்து இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை தேர்வுக்குழு செயலாளர் ரவிச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
முதலமைச்சரின் ஆணைப்படி, எஸ்விஎஸ் யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியில் பயின்றுவரும் அனைத்து மாணவர்களுக்கும், அரசு கல்லூரியில் இடம் மாற்றம் செய்வதற்கான ஆணை வழங்கப்படுகிறது.
 
மொத்தம் 136 மாணவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக பதிவேட்டில் மாணவர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின், அவர்களின் ஆலோசனைப்படி அந்தந்த கல்வியாண்டில் இணைப்பு ஆணை வழங்கப்படும்.
 
அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரியில் சேருவதற்கான இடம் ஒதுக்கீட்டு ஆணை மட்டும் இப்போது வழங்கப்படுகிறது.
 
ஓமியோபதி படிப்பை தேர்ந்தெடுத்தவர்களுக்கு இடம் ஒதுக்கீட்டு ஆணை வழங்க, மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோரியிருக்கிறது.
 
அனுமதி கிடைத்ததும் அவர்களுக்கும் இடம் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
 
இந்த கலந்தாய்வில், 47 மாணவர்கள், 64 மாணவிகள் என 111 பேருக்கு இடம் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.