வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 16 ஜூன் 2015 (01:32 IST)

செம்மரக் கடத்தலில் ஆளுங்கட்சி முக்கியப் பிரமுகர்கள் உள்ளனர்: கருணாநிதி குற்றச்சாட்டு

செம்மரக் கடத்தலில் கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி.க்கு உதவியாக ஆளுங்கட்சியைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
 
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கேள்வி -பதில் வடிவில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கேள்வி : செம்மரக் கடத்தலில் கைது செய்யப்பட்ட டி.எஸ்.பி.க்கு உதவியாக ஆளுங் கட்சியைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் இருந்ததாகச் செய்திகள் வந்ததே தவிர, அவர்கள் யார் என்று தெரியவில்லையே?
 
பதில் : அவர்களின் பெயர்களையும், விவரங்களையும் மூடி மறைப்பதற்குத்தான் மிகப் பெரிய முயற்சி நடைபெற்று வருகிறதாம். இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களில் சிலர் அரசியலில் மிகப் பெரிய பதவிகளிலே இருப்பதால், அவர்களைக் காப்பாற்றுவதற்கு முயலுகிறார்களாம்.
 
இது பற்றிக் கூட வேலூரில் செய்தியாளர்களிடம் ஆந்திர மாநில செம்மரக் கட்டைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவைச் சேர்ந்த டி.எஸ்.பி., வெங்கடேஸ்வரன் என்பவர்  கூறும்போது, செம்மரக் கட்டைகள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, வேலூர் கலால் டி.எஸ்.பி., தங்கவேலுவைக் காப்பாற்ற, வேலூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
 
இந்த வழக்கில், முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டிய தங்கவேலுவை மூன்றாவது குற்றவாளியாகச் சேர்த் துள்ளனர். இந்த வழக்கு "குற்றம் நிரூபிக்கப்பட வில்லை" எனக் கூறி தள்ளுபடி செய்யப்படும். அந்த வகையில் வழக்கு விசாரணை மோசமாக இருக்கிறது. தங்கவேலுவுடன் ஒரே பேட்ச்சில் பயிற்சி பெற்ற டி.எஸ்.பி.க்கள் தான் இப்போது இந்த வழக்கை விசாரித்து வரும் தனிப்படையில் உள்ளனர்.
 
இந்த வழக்கில், அவர்களுக்கு பல லட்சம் ரூபாய் கை மாறி உள்ளதால், அவர்கள் தங்கவேலுவைக் காப்பாற்றவே முயற்சி செய்கின்றனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியும், இரண்டாவது குற்றவாளியும் தங்கவேலு குறித்து விசாரணையில் சொன்ன முக்கிய தகவல்களைப் பதிவு செய்யவே இல்லை.
 
தங்கவேலு ஜாமீனில் வெளியே வந்துவிட்டால், பதுக்கி வைக்கப்பட்டுள்ள கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள், கோல்கத்தாவுக்கு கடத்தப்படுவது நிச்சயம்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.
 
அதிமுக ஆட்சியில் எப்படியெல்லாம் உயர் பதவிகள் வகிக்கும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் சட்டத்தை நொறுக்கும் காரியங்கள் வேகமாக நடைபெறுகின்றன என்பதை ஆந்திர மாநிலக் காவல் துறை அதிகாரி ஒருவரே செய்தியாளர்களிடம் விவரித்திருக்கிறார். அவர் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டுகள் சாதாரணமானவை அல்ல.