செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 24 நவம்பர் 2014 (17:18 IST)

திருமணமாகாத விரக்தியில் சகோதரனின் கழுத்தை அறுத்த சகோதரிகள் - தற்கொலை முயற்சியில் ஒருவர் உயிரிழப்பு

திருமணமாகாத விரக்தியில் சகோதரனின் கழுத்தை சகோதரிகள் அறுக்க முயன்றனர். பின்னர் நடந்த தற்கொலை முயற்சியில் ஒருவர் உயிரிழந்தார்.
 
மேற்கு தாம்பரம் ஸ்ரீராம் நகரில் வசித்து வந்தவர் மணிகண்டன். இவர் தனது சகோதரிகளான மகாதேவி மற்றும் நிர்மலாதேவியோடு வசித்து வந்துள்ளார். இரண்டு பேரும் பட்டப் படிப்பை முடித்துள்ளனர். மணிகண்டன் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
 
இவர்களது தந்தை, சிறு வயதிலேயே தாய் இறந்து விட்டதால் இரண்டுஆவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் மகாதேவி, நிர்மலாதேவி, மணிகண்டன் ஆகிய மூவரும் தனியாக வசித்து வந்திருக்கிறார்கள்.
 
தனது சகோதரிகளுக்கு மணிகண்டன் பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்துள்ளார். ஆனாலும் 35 வயதை கடந்து விட்ட பின்னரும் மகாதேவிக்கும், நிர்மலா தேவிக்கும் திருமணமாகாத நிலையில், மணிகண்டன் தனக்குப் பெண் பார்த்துள்ளார். இதனால் தங்களுக்குத் திருமணம் ஆகாத நிலையில் தம்பி, திருமணம் செய்து கொண்டு தனியாக சென்று விடுவான் என்று மகாதேவிக்கும், நிர்மலாதேவிக்கும் நினைத்துள்ளனர்.
 
இது தொடர்பாக மூன்று பேருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், சகோதரிகள் இருவரும் மணிகண்டனிடம், நாம் மூன்று பேருமே தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இதற்கு மணிகண்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சகோதரிகள் இரண்டு பேரையும், சமாதானப்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். இதனால் மூன்று பேருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மணிகண்டனின் கழுத்தை அறுத்து கொன்று விட்டு தாங்களும் தற்கொலை செய்ய சகோதரிகள் முடிவு செய்தனர்.
 
இதன்படி, மணிகண்டனின் கழுத்தை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் கழுத்து அறுபட்டு ரத்தம் கொட்டிய நிலையில் அலறியடித்துக் கொண்டு மணிகண்டன் வீட்டை விட்டு வெளியில் ஓடி வந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
 
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தாம்பரம் காவல் துறையினர் விரைந்து சென்றுள்ளனர். அதற்குள், மகாதேவியும், நிர்மலாதேவியும், வீட்டின் கதவை உள் பக்கமாக பூட்டிக் கொண்டு கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளனர். கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற காவல் துறையினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
 
ஆனால் நிர்மலாதேவி பரிதாபமாக உயிரிழந்தார். குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த உமாதேவி மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.