1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 9 செப்டம்பர் 2014 (15:07 IST)

மாணவர்களின் கையில் சூடம் ஏற்றி சத்தியம் வாங்கிய இரக்கமற்ற அரசு விடுதி சமையல்காரர்கள்

மாணவர் ஒருவரின் பணம் காணாமல் போன விவகாரத்தில் விடுதியில் மற்ற மாணவர்களின் கையில் சூடம் ஏற்றி சத்தியம் செய்யச் சொல்லி புண்ணாக்கிய விவகாரத்தில் விடுதி சமையலர்கள் இருவர் உள்பட மூவர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
 
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே மும்முடி என்ற இடத்தில் ஆதி திராவிட நல விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் 65 மாணவர்கள் உள்ளனர். கடந்த 25 ஆம் தேதி ஜெயப்ரகாஷ் என்ற மாணவர் வைத்திருந்த ரூ.150 காணவில்லை என்று கூறி, மற்ற மாணவர்களிடம் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது, 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஜெயபால் என்பவருடன் சேர்ந்து 13 மாணவர்கள் கையில் கற்பூரத்தை ஏற்றி, சத்தியம் செய்யச் சொல்லியுள்ளனர். இதில், இடது கையில் 11 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், விடுதியை சரியாகப் பராமரிக்காமல் இருந்த காப்பாளர் தங்க.மாரியப்பன், சமையலர்கள் செல்வராஜ், அம்பாயிரம் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், அவர்களை இடமாற்றம் செய்தும் ஆட்சியர் மகரபூஷணம் இன்று உத்தரவிட்டார்.