1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (11:09 IST)

பலத்த சூறைக்காற்று எச்சரிக்கை.! குமரி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை - வெறிச்சோடிய துறைமுகங்கள்.!!

Boating
பலத்து சூறைக்காற்று காரணமாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
 
குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வடகிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலுக்கும், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என தேசிய வானிலை ஆராய்ச்சி மையம், அகமதாபாத் வானிலை எச்சரிக்கை விடுத்திருந்தது. 
 
மேலும், மேற்கண்ட கடற்பகுதிகளில் 31 ம் தேதிவரை  சூறாவளி காற்று மணிக்கு 55 கி.மீ. முதல் 65 கி.மீ வேகத்திலும், இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும், மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கி.மீ. வேகத்திலும், கேரளா-கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ, வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இப்பகுதிகளில் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா அறிக்கை விடுத்திருந்தார். இதனால் இன்று குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்களும், 1500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை.
 
கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று காலை முதல் சூறைக் காற்று வீசி வருவதுடன் ராட்சத அலைகளும் எழும்பி வருகின்றன. மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. 

 
கடற்கரை ஓரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் கட்டுமரங்கள், வள்ளங்கள் பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் தேங்காபட்டணம், சின்ன முட்டம், குளச்சல் துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.