1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 3 ஏப்ரல் 2015 (13:34 IST)

’கேரளாவுக்கு செல்லும் லாரிகளை தடுத்து நிறுத்துவோம்’ - உரிமையாளர்கள் சங்கம்

வாளையார் சோதனைச்சாவடி பிரச்சினைக்கு தீர்வு காண 24 மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால், கேரளாவுக்கு அனைத்து வழிகளிலும் லாரிகள் செல்வதை நிறுத்துவோம் என்று லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
 
கோவை எல்லையில் உள்ள வாளையார் சோதனைச்சாவடியில் சரக்கு லாரிகளை நீண்ட நேரம் காத்திருக்க வைப்பதாலும், லாரி டிரைவர்களுக்கு போதுமான அடிப்படை வசதி இல்லாததாலும் பிரச்சினை ஏற்பட்டு வருகிறது.
 

 
இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வற்புறுத்தி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால், வாளையார் சோதனைச்சாவடி வழியாக லாரிகள் செல்லவில்லை. இதேபோல் கோவை அருகே உள்ள வேலந்தாவளம் சோதனைச்சாவடி வழியாகவும் லாரிகள் செல்லவில்லை.
 
இதனை தொடர்ந்து நேற்று 2ஆவது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்றது. அப்போது அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தென்னிந்திய பொதுச்செயலாளர் ஜி.ஆர்.சண்முகப்பா நிருபர்களிடம் இதனை தெரிவித்தார்.
 
இது குறித்து அவர் பேசும்போது, “வாளையார் சோதனைச்சாவடி விவகாரம் குறித்து பேசுவதற்காக கேரள முதலமைச்சர் எங்களை அழைத்திருந்தார். அவரை சந்திக்க நாங்கள் புறப்பட்டு சென்றபோது கேரள அதிகாரிகள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக தகவல் தெரிவித்தனர்.
 
இன்னும் 24 மணி நேரத்துக்குள் கேரள அரசு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால், அனைத்து வழிகளிலும் கேரளாவுக்கு லாரிகள் செல்வதை நிறுத்துவோம். எங்களது போராட்டத்துக்கு நாமக்கல் கியாஸ் டேங்கர் லாரி கூட்டமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
 
கேரள லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில், இந்த கோரிக்கையை வற்புறுத்தி கேரளாவில் உள்ள 80 ஆயிரம் லாரிகளை இயக்காமல் நிறுத்துவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்” என்று தெரிவித்தார்.