வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Modified: செவ்வாய், 3 பிப்ரவரி 2015 (07:34 IST)

ஸ்ரீரங்கத்தில் ஆளுங்கட்சியினரால் அதிகாரிகள் மிரட்டப் படுகிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்

ஸ்ரீரங்கத்தில் ஆளுங்கட்சியினரால் அதிகாரிகள் மிரட்டப் படுகிறார்கள் என்றும் பணம் கொடுக்கும்படி கட்டாயப் படுத்தப்படுகிறார்கள் என்றும் பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
 
பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
 
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினர் சேர்க்கை 5 கோடியை தாண்டுகிறது. தமிழகத்தில் இதுவரை 13 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளோம். இன்னும் 2 மாதத்தில் 60 லட்சம் உறுப்பினர்களை நாங்கள் சேர்த்து விடுவோம். ஸ்ரீரங்கத்தில் பாஜகவுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது.
 
மாநில பொதுச்செயலாளர் நரேந்திரனை ஸ்ரீரங்கம் பொறுப்பாளராக நியமித்து இருக்கிறோம். வாக்குச்சாவடிகளுக்கும் பொறுப்பாளர்களை நாங்கள் நியமித்து இருக்கிறோம். ஸ்ரீரங்கம் தேர்தலில் மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர்.
 
பாஜக கட்சி தலைவர்களும் பிரசாரம் மேற்கொண்டு உள்ளனர். ஸ்ரீரங்கத்தில் ஆளுங்கட்சியினரால் அதிகாரிகள் மிரட்டப் படுகிறார்கள். பணம் கொடுக்கும்படி கட்டாயப் படுத்தப்படுகிறார்கள். ஆட்சி அதிகாரம் ஸ்ரீரங்கத்தில் முடுக்கி விடப்பட்டுள்ளது. தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
 
ராணிப்பேட்டை தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 10 தொழிலாளர்கள் பலியாகி இருக்கிறார்கள். இது குறித்து தமிழக அரசு வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும். தமிழக அரசு டாஸ்மாக் திட்டத்தில் மட்டும்தான் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறது. மற்ற திட்டங்களில் பெயில் மார்க்தான் பெற்று இருக்கிறது.
 
தேமுதிக எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஸ்ரீரங்கத்தில் எங்களுடன் பிரசாரத்திற்கு வருகிறார். அங்குள்ள தேமுதிக தொண்டர்கள் எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். விஜயகாந்தை நாங்கள் சந்தித்து பேசியபோது, எங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்து இருக்கிறார்.
 
தேமுதிக போட்டியிடுவது போன்று நினைத்து நீங்கள் வேலை பார்க்க வேண்டும்’ என்று அவர் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து மேலும் நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.