வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2015 (01:18 IST)

ஈழத்தமிழர் படுகொலை: சர்வதேச விசாரணை கோரி எஸ்.டி.பி.ஐ. போராட்டம்

ஈழத்தமிழர் படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரி செப்டம்பர் 30 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என எஸ்.டி.பி.ஐ.கட்சி அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து, எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
இலங்கையில் நடைபெற்ற ஈழத்தமிழர்களின் மீதான இனப்படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும், போர் குற்றங்களையும் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில், ஆணையத்தின் தலைவர் சையத் அல்ராப் ஹுசைன் தாக்கல் செய்த அறிக்கை மற்றும் 2014ஆம் ஆண்டு மனித உரிமை ஆணையர் நியமித்த மூவர் குழுவின் அறிக்கை ஆகியவை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.
 
இனப்படுகொலைகளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் ஓரளவு ஏற்படுத்தியது. சர்வதேச விசாரணையும் நடைபெறும் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தியது.
 
ஆனால், இலங்கை அரசோ இலங்கையில் உள்நாட்டு விசாரணையே நடைபெறும் என்றும் வரும் ஜனவரி முதல் அத்தகைய விசாரணை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
 
இலங்கை அரசின் இந்த விசாரணை பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது. குற்றவாளியே விசாரிப்பது என்பது நீதியையே கேலிக்கூத்தாக்கி விடும். எனவே சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்.
 
மேலும், இலங்கை அரசை காப்பாற்றும் வகையில் அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வந்து, அதில், உள்நாட்டு விசாரணையே போதுமானது என்று கூறியுள்ளது.
 
அத்துடன், அந்த விசாரணை அமைப்பில் வேண்டுமானால் காமன்வெல்த் நாடுகளின் நீதிபதிகள் இடம் பெறலாம் என்றும் வரைவு தீர்மானத்தை ஜெனிவா மனித உரிமை கூட்டத்தில் தாக்கல் செய்துள்ளது. இது நீதியை நீர்த்து போக செய்யும் செயலாகும்.
 
எனவே, அமெரிக்கா தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு அளிக்க கூடாது. 
சர்வதேச விசாரணை கோரி தனிதீர்மானம் ஒன்றை இந்திய அரசு மனித உரிமை கூட்டத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
 
இந்த கோரிக்கையை முன்வைத்து, ஐநா சபையை வலியுறுத்தி, செப்டம்பர் 30ஆம் தேதி அன்று சென்னை அடையாறு  யுனிசெஃப் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்  நடத்த உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.