செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 29 நவம்பர் 2024 (11:26 IST)

பாம்பன் ரயில் பாலம் `சிறந்த கட்டுமானம் கொண்டது: தென்னக ரயில்வே விளக்கம்

புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலம் தரம் குறைந்ததாக கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த கட்டுமான உத்திகளுடன் பாம்பன் பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக ராமேஸ்வரம் தீவு பகுதியை இணைக்கும் பாம்பன் பாலம், கடல் காற்றின் அரிப்பால் வலு இழந்ததால், ₹550 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்பட்டது. இதனை சுற்றி சில சர்ச்சைகள் ஏற்பட்டன. குறிப்பாக, பாதை சீரமைப்பு சரியாக இல்லை, வடிவமைப்பு மற்றும் திட்டமிடல் குழுவின் அனுமதி பெறப்படவில்லை, கடல் அரிப்பு, துருப்பிடித்தல் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என கூறப்பட்டது.

இந்த நிலையில் தென்னக ரயில்வே அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில், புதிய பாம்பன் பாலம் பல புதுமையான பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் முதன்முறையாக கப்பல் போக்குவரத்துக்காக செங்குத்தாக மேலே எழும்பும் பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய மற்றும் இந்திய தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. சென்னை இந்திய தொழில்நுட்ப பல்கலைக்கழக வல்லுநர்களின் ஆய்வுகள் மற்றும் வெளிநாட்டு தொழில்நுட்ப ஆலோசனைகளின் படி கட்டப்பட்டது. 100% சரிபார்க்கப்பட்டதுடன், சிறந்த கட்டுமான உத்திகளும் நவீன தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கடல் அரிப்பை எதிர்கொள்ளும் வகையில், சிறப்பு சிலிக்கான் பெயிண்ட் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே கூறியுள்ளது.


Edited by Siva