தென் தமிழக மக்களே உஷார்.. அடுத்த 2 நாட்களுக்கு அடை மழை! – தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
தென் மாவட்டங்களில் நேற்று முதலாக கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலாகவே தொடர்ந்து பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சமீபத்தில் தென் இலங்கை கடற்பகுதியை ஒட்டிய வங்க கடல் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழக மாவட்டங்களான கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முதலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் ப்ரதீப் ஜான் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன்னியாக்குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அதிகபட்சமாக மாஞ்சோலை மலைப்பகுதியில் 30 செ.மீ முதல் 50 செ.மீ வரை மழைப் பதிவாகலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று முதலாக பெய்து வரும் மழைக்கே தென் மாவட்டங்களின் பல பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Edit by Prasanth.K