1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (18:28 IST)

அதிமுகவை கைப்பற்ற நினைத்தால் கையை வெட்டுவேன்: ஓ.பி.எஸ்.க்கு மா.செ. பகிரங்க சவால்

அதிமுகவை கைப்பற்ற நினைத்தால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையை வெட்டுவேன் என அதிமுக தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.


 

சசிகலாவிற்கு எதிராக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சராமாரியான குற்றச்சாட்டுகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், அதிமுக தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலர் சசிகலா தலைமையில் இரண்டாக பிளவுபட்டுள்ளது.

அரசியல் வட்டாரங்கள் கொந்தளிப்பில் உள்ள நிலையில், பன்னீர்செல்வம் தரப்பும், சசிகலா தரப்பும் தாங்கள் ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் முறையிட்டனர். இதனையடுத்து தமிழக சூழ்நிலை குறித்து மத்திய அரசுக்கும் ஜனாதிபதிக்கும் ஆளுநர் வித்யாசகர் ராவ் அறிக்கை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் அதிமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி. கலைராஜன், “அதிமுகவைக் கைப்பற்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முயற்சித்தால் அவரது கையை வெட்டுவேன்” என பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மாவட்ட செயலாளர் ஒருவர், மாநில முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.