புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : புதன், 16 அக்டோபர் 2024 (14:31 IST)

சிறுவாணி அணை 43.49 அடியாக உயர்வு!!!

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் சிறுவாணி அணை அமைந்து உள்ளது. இந்த அணை கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக இருக்கிறது. மிகவும் சுவையான குடிநீரான சிறுவாணி நீர், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு பல்வேறு பகுதிளுக்கு  தினமும் விநியோகிக்கப்படுகிறது
 
கோவை மாநகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு மொத்தத் தேவை என்பது 265 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) தண்ணீர் ஆக உள்ளது. இதில் 101.40 எம்.எல்.டி தண்ணர் சிறுவாணி குடிநீர் திட்டத்தில் இருந்து எடுத்து கோவை நகருக்கு விநியோகிக்கப்படுகிறது.
 
கோவைக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் 43 அடியாக உயர்ந்தது.
 
அணையின் நீர் பிடிப்பு பகுதியில் 60 மில்லி மீட்டரும், அடிவாரத்தில் 14 மில்லி மீட்டர் மழையும் பெய்தது. அணையில் இருந்து 9 கோடியே 90 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டது.
 
தொடர்ந்து அணைப் பகுதியில் மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை தமிழக - கேரளா அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.