1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வெள்ளி, 28 அக்டோபர் 2016 (14:57 IST)

ஓரங்கட்டப்படும் ஜெயலலிதா?: கைப்பாவை ஆகிய தமிழக அரசு?

ஓரங்கட்டப்படும் ஜெயலலிதா?: கைப்பாவை ஆகிய தமிழக அரசு?

தமிழகத்தில் வரும் நவம்பர் 1 முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் என தமிழக அரசு நேற்று செய்திக்குறிப்பு வெளியிட்டது. இந்த அறிவிப்பு பலருக்கும் வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.


 
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த அறிவிப்புக்கு சம்மதம் அளித்தாரா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. காரணம் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இந்த மசோதா கொண்டு வரப்பட்ட போது இதனை கடுமையாக எதிர்த்தார் முதல்வர் ஜெயலலிதா.
 
அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதிய ஜெயலலிதா, இம்மசோதா குழப்பங்கள் நிறைந்ததாக உள்ளது .இந்தியா போன்ற கூட்டாட்சி நடக்கும் நாட்டில், மாநிலங்களுக்கே மக்களுடன் நெருங்கிய மற்றும் மறைமுக தொடர்புகள் உள்ளன.
 
எனவே உணவு பாதுகாப்பு மசோதா போன்ற மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தும் உரிமையை மாநிலங்களுக்கே அளிக்க வேண்டும். மேலும் மாநில அரசுகளின் உரிமைகளில் தலையிட முயற்சிக்க வேண்டாம் எனவும் அந்த திட்டத்தில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
 
இந்த விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் இடையே பெரிய அறிக்கை யுத்தமே அப்போது நடந்தது. ஆனால் தற்போது ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போது, அவர் முதலமைச்சராக இருக்கும் இந்த அரசு அவர் எதிர்த்த ஒரு திட்டம் அமலுக்கு வருவதாக கூறியிருப்பது வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
 
ஜெயலலிதாவின் கவனத்துக்கு இந்த விவகாரம் சென்ற பின்னர் தான் அறிவிப்பு வந்ததா என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஜெயலலிதாவுக்கு உடன்பாடு இல்லாத இந்த திட்டம் அமலுக்கு வர ஏதாவது நிர்பந்தங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனவும், ஜெயலலிதாவுக்கு தெரியாமல் தான் இவை நடக்கின்றன எனவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
பாஜக தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த உதய் மின் திட்டத்திலும் தற்போது தமிழக அரசு இணைவதாக முன் வந்திருப்பதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். ஆனால் இந்த திட்டத்தில் சில திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கூறியிருந்தார். அந்த திருத்தங்கள் செய்யப்படுமா என்பது சந்தேகமே இந்நிலையில் அந்த திட்டத்திலும் தமிழக அரசை இணைத்துவிட மத்திய அரசு முயல்வதாக கூறப்படுகிறது.
 
இவ்வாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருப்பதால், அவர் தடையாக இருந்த சில திட்டங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயன்று வருவதாகவும், தமிழக அரசும் நெருக்கடிகளை சமாளிக்க முடியாமல் மத்திய அரசுக்கு தலையாட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.