1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 29 ஏப்ரல் 2020 (12:06 IST)

நாளை ஒரு நாள் ஊரடங்கு தளர்வா? தமிழக அரசு சொல்வது என்ன??

நாளை (30/4/2020) மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு தகவல். 
 
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக் காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 29 இரவு வரையும், சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வரும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல் ஏப்ரல் 28 இரவு வரைமுழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவித்தார். 
 
இந்த 4 நாள் முழு முடக்கம் இன்று இரவு முடிவுக்கு வரும் நிலையில் நாளை மட்டும் கடைகள் கூடுதல் நேரம் திறந்திருக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளதாவது, 
 
சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும். எனவே மக்கள் அவசரம் காட்டாமல் மாஸ்க் அணிந்து, தனிநபர் இடைவெளியுடன் பொருட்களை வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், நாளை ஒரு நாள் மட்டுமே இந்த சலுகை என்றும், மே 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை மாநகராட்சிகளிலும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.