வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2016 (16:43 IST)

30 வயதிலிருந்து புற்றுநோய் பரிசோதனை செய்வது அவசியம்: டாக்டர் சாந்தா விளக்கம்

தொடக்கத்திலேயே புற்றுநோயை கண்டறிந்தால் அதை குணப்படுத்த முடியும் என்றும் 30 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் புற்றுநோய் பரிசோதனை கட்டயம் செய்து கொள்ள வேண்டும் என்றும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா கூறியுள்ளார்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் நேற்று புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்பட்டது. மருத்துவமனையில் புற்றுநோய் குறித்த சிறப்பு விழப்புணர்வு முகாம் நடைபெற்றது. 
 
இந்நிலையில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா செய்தியாளர்ளை சந்தித்தார். அப்பொழுது கூறுகையில், காய்கறிகள், பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோயை தடுக்க முடியும். புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் வர அதிக காரணம். எனவே அதை பயன்படுத்துவதை உடனடியாக இளைஞர்கள் நிறுத்த வேண்டும். 
 
புற்றுநோயால் ஆண்டுக்கு 80 லட்சம் பேர் பலியாகி கொண்டு இருக்கின்றனர். இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் 5 லட்சம் முதல் 7 லட்சம் பேர் வரை இறக்கின்றனர்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு மட்டும் 56 ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். தொடக்கத்திலேயே புற்றுநோயை கண்டறிந்தால் அதை குணப்படுத்த முடியும்.
 
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகர பகுதிகளில் பெண்களுக்கு அதிகமாக மார்பக புற்றுநோய் காணப்படுகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் கர்ப்பப்பை புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்க தடுப்பு ஊசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊசியை விழுப்புர மாவட்ட மக்களுக்கு முதன் முதலாக போட உள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.