திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (08:37 IST)

மின் தடைக்கு காரணம் அணிலா? அதிமுகவா?

மின் தடை குறித்த ராமதாஸின் கிண்டல் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. 

 
தமிழகத்தின் பல மாவட்டங்களில் தினம்தோறும் சில மணி நேரங்கள் மின்தடை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் மின்தடை குறித்து சமீபத்தில் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த சில மாதங்களாக மின்வாரிய பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததால், தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் மின்கம்பிகளில் கொடிகள் படர்ந்துள்ளதாலும், அணில்கள் ஓடுவதாலும் மின்தடை ஏற்படுகிறது என கூறியிருந்தார்.
 
அவரின் விளக்கத்தை விமர்சித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், மின் கம்பிகளில் கொடி படர்ந்து அணில்கள் ஓடுவதால் மின் தடை ஏற்படுகிறது: மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி - விஞ்ஞானம்.... விஞ்ஞானம்! சென்னையில் இப்போதெல்லாம் அடிக்கடி மின் தடை ஏற்படுவதன் மர்மம் என்னவாக இருக்கும்? ஒருவேளை சென்னையில் அணில்கள் பூமிக்கு அடியில் ஓடுகின்றனவோ? என கிண்டலாய் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இந்நிலையில் ராமதாஸின் கிண்டல் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி. அவர் கூறியதாவது, மின்தடை ஏற்பட அணில் மட்டுமே காரணம் என நான் சொன்னதாக சித்தரிக்கும் ராமதாஸ், தம் கூட்டணிக் கட்சியான அதிமுகவிடம் ஏன் பராமரிப்பு பணிகளைச் செய்யவில்லை எனக் கேட்டிருக்கலாம் எனச் சாடியுள்ளார்.
 
அணில்களும் மின்தடை ஏற்படுத்துகின்றன என்பது உலகில் மின்வாரியங்கள் சந்திக்கும் சவால்.  பறவைகள், அணில்கள், கிளைகளுக்கிடையே தாவும் பொழுதும் மின்தடை ஏற்படுகிறது. இதனை அவர் தேடிப் படித்திருக்கலாம். களப்பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து சரி செய்வதற்கான பணிகளை முன்னெடுக்கிறார்கள். எந்தச் சவாலும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு பெரிதன்று. திட்டமிடல், களப்பணி மூலம் உண்மையான மின்மிகை மாநிலத்தை உருவாக்குவோம் என்று கூறியுள்ளார்.