செம்பரம்பாக்கம் திறக்கப்படுமா? பீதியை அதிகரிக்கும் நிவர்!
மழை பொழிவை பொறுத்தே செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் அறிவிப்பு.
தமிழகத்தின் அருகே வங்கக்கடலின் தெற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறியுள்ளது. நிவர் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக மாறி நாளை பிற்பகல் மாமல்லப்புரம் – காரைக்கால் இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
தற்போது வங்க கடலில் நிலை கொண்டுள்ள நிவர் வலுவடைந்துள்ளதால் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக மாறி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்போது 120 முதல் 145 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், சுற்றுவட்டார மாவட்டங்களில் 100 முதல் 120 கி.மீ வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மழை பொழிவை பொறுத்தே செம்பரம்பாக்கம் ஏரியை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கடந்த வாரம் சென்னையில் மழை பெய்த போதே சென்னையில் குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21 அடியை தாண்டியது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 1,086 கன அடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.