1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 8 டிசம்பர் 2017 (16:16 IST)

சேகர் ரெட்டி டைரி குறிப்புகள் லீக் ; பிரச்சாரத்தை ரத்து செய்த ஓபிஎஸ் : பின்னணி என்ன?

மணல் அதிபர் சேகர் ரெட்டியின் டைரியில் இருந்து சில பக்கங்கள் வெளியே கசிந்து அதிமுக அமைச்சர்களுக்கு வயிற்றில் புளியை கரைத்துள்ளது. 


 
அதிமுக ஆட்சி காலத்தில் மணல் அதிபராக வலம் வந்தவர் சேகர் ரெட்டி. துணை முதல்வர் ஓ.பி.எஸ் உள்பட பல முக்கிய அமைச்சர்களுக்கு அவர் நெருக்கமானவராக இருந்தார் எனக் கூறப்படுகிறது.
 
கடந்த ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்தபோது இந்தியா முழுவதும் ஒரே ஒரு ரூ.2000 நோட்டுக்காக வங்கி வாசலில் கால்கடுக்க கோடிக்கணக்கான பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் சேகர் ரெட்டி என்ற தனிப்பட்ட நபரிடம் இருந்து மட்டும் கோடிக்கணக்கில் புதிய ரூ.2000 நோட்டு கைப்பற்றப்பட்டது. இதன்பின்னர் அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனால், அதன்பின் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.


 
இந்த நிலையில் ஆங்கில தொலைக்காட்சி டைம்ஸ் நவ் இன்று காலை சேகர் ரெட்டியின் டைரியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த டைரியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்சி சம்பத், தங்கமணி, ஆர்பி உதயகுமார் ஆகியோர்களுக்கு பணம் கொடுத்த விபரங்கள் உள்ளன. மேலும் ஒரு முன்னணி பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கு ரூ.2 லட்சம் கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்த டைரியில் குறிப்பிடப்பட்டிருக்கும் அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், இதுபற்றி சரியான விளக்கம் அளிக்கவில்லை எனில் பாமக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என டாக்டர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு, அன்புமணி ராமதாஸ் கவர்னரை சந்தித்து அதிமுக அமைச்சர்கள், சேகர் ரெட்டியோடு சேர்ந்து செய்த ஊழல் தொடர்பான புகார் மனுவை அளிப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


 
எனவே, இந்த விவகாரம் ஆளும் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட பல அமைச்சர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆர்.கே.நகரில் மதுசூதனனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய ஓ.பி.எஸ் இன்று திட்டமிட்டிருந்தார். ஆனால், ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல், ஓ.பி.எஸ், விஜய் பாஸ்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் பிரச்சாரத்தை ரத்து செய்து விட்டு வீடு திரும்பி விட்டனர் எனக் கூறப்படுகிறது.