வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 16 செப்டம்பர் 2015 (14:12 IST)

முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மானம்: சீமான் வரவேற்பு

இலங்கைக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற்கிறோம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கையில் நடந்த போர்குற்றத்தை விசாரிக்க சுதந்திரமான சர்வதேச விசாரணை தேவை என தீர்மானம் நிறைவேற்ற்றினார். பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த தீர்மானத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை திமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரித்தன.

இந்த தீர்மானம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், காலத்தின் தேவை குறித்து இந்த தீர்மானம் இன்று தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேறியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் இந்த நேரத்தில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூட இதே தீர்மானத்தை அண்மையில் கொண்டு வந்திருந்தார். இதே தீர்மானத்தை இன்று சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்துள்ளார். தமிழ் தலைவர்கள் அனைவர் மத்தியிலும் ஒரே கருத்து நிலவி வருகிறது.

இன்று இலங்கைக்கு எதிராக தமிழக முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்தை நாங்கள் வரவேற்கிறோம்.இதை வெறுமனவே விட்டுவிடாமல் இந்திய மத்திய அரசும் இதே போல் ஒரு தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

மாநில அரசு கொண்டு வரும் தீர்மானத்தை நாங்கள் மதிப்பளிக்க தேவையில்லை என கூறிக்கொண்டு இருக்காமல்,மத்திய அரசு சர்வதேச விசாரணை தேவை என்ற கோரிக்கையை கொண்டு வர வேண்டும்.

8 கோடி மக்களின் பிரதிநிதியாக இருக்கும் தமிழக சட்ட மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானங்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய மத்திய அரசு இருக்கிறது.எனவே இந்த தீர்மானம் நிச்சயமாக மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இதற்கான ஒரு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன் என சீமான் தெரிவித்தார்.