இது மக்களுக்கான காவல்துறையா? பன்னாட்டு முதலாளிகளுக்கான ஏவல்துறையா? :சீமான்


Bala| Last Updated: வியாழன், 29 அக்டோபர் 2015 (12:56 IST)
மக்களை பாதுக்காக்க காவல்துறை என்ற நிலை மாறி, பன்னாட்டு முதலாளிகளையும், அவர்களது தொழில்களையும் பாதுகாக்கிற ஏவல்துறையாக மாறி இருப்பது ஜனநாயக நாட்டில் தான் நாமெல்லாம் வாழ்கிறோமா என்ற சிந்தனையை ஏற்படுத்தி உள்ளது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 

திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் பன்னாட்டு நிறுவனமான கோககோலா நிறுவனம் ”சவுத் இந்தியா பாட்டிலிங் கம்பெனி (South India Bottling Company Pvt Ltd.)” என்ற பெயரில் கோககோலா குளிர்பானத்தை உற்பத்தி செய்து வருகிறது. 2006யில் தொடங்கிய இந்த நிறுவனம் குளிர்பானத்தை உற்பத்தி செய்ய ஒருநாளைக்கு 90000 லிட்டர் தண்ணீரை தென் தமிழகத்தின் உயிர் ஆதாரமாக விளங்கி வருகிற தாமிரபரணி ஆற்றிலிருந்து உறுஞ்சி வருகிறது. இந்நிலையில் சென்ற வருடம் இதே நிறுவனம் அதன் நெகிழி போத்தல் (Plastic) உற்பத்தியை விரிவுபடுத்த அரசிடம் அனுமதி கோரியது அதன்படி இனி ஒருநாளைக்கு 180000 லிட்டர் உறிஞ்சப்படும் என்றும் ஆயிரம் லிட்டர்  13.50 ரூபாய்க்கு கொள்முதல் செய்து கொள்ளவும்  கணக்கிடப்பட்டு எம் உயிர் ஆதார நதியான தாமிரபரணி பன்னாட்டு நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமான  தாமிரபரணி நீரை நம்பியிருக்கும் திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களின் விவசாயமும் வாழ்வியலும் முற்றிலும் பாதிக்கப்பட்டு மக்கள் குடிநீர் பற்றாக்குறையில் திண்டாடும்  அபாயம் ஏற்பட்டு இருப்பதால், இதனை எதிர்த்து எம் தாய்த்தமிழ் உறவுகள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். குறைந்தபட்சம் மக்கள் கருத்தை அறியும் கூட்டத்தையாவது நடத்த  கூட மறுத்து  தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அரசின் சிப்காட் நிறுவனமும் கோககோலா நிறுவனத்தின் விரிவுக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் இன்னொரு பன்னாட்டு நிறுவனமான பெப்சியும் ஆலை அமைத்து தாமிரபரணி ஆற்றை உறுஞ்சி  அதன் உற்பத்தியை தொடங்கியிருக்கிறது. அதிலும் ஒரு லிட்டர் வெறும் 35 காசுகளுக்கு விற்க அரசு அனுமதி வழங்கியிருக்கிறது,


இதில் மேலும் படிக்கவும் :