செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2020 (12:49 IST)

உதயநிதிக்கு கொரோனா இருக்கா? தனிமை படுத்தப்பட்டாரா? சீமான் கேள்வி!

ஊரடங்குக்காலத்தில் அனுமதிச்சீட்டு பெற்று பயணிக்கின்ற விதி சாமானியர்களுக்கு மட்டும்தானா? எதிர்க்கட்சியினருக்கு  இல்லையா? என சீமான் கேள்வி. 
 
இது குறித்து சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக நாடு முழுமைக்கும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாய் முடங்கியிருக்கிற சூழலில் மாவட்ட எல்லையைக் கடப்பதற்கே அரசின் அனுமதிச்சீட்டு (E-Pass) பெற வேண்டிய விதியிலிருந்து சிலருக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டு வருவது கேலிக்கூத்தாக இருக்கிறது. 
 
நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனப் பொதுமக்கள் மீது சுமையை ஏற்றிவிட்டு, அதைக் கடைப்பிடித்து முன்னுதாரணமாக இருக்கவேண்டிய சிலர் தான்தோன்றித்தனமாக நடந்து விதிகளைப் புறந்தள்ளுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
 
சாத்தான்குளத்தில் எதிர்க்கட்சியினருக்கு மட்டும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி வழங்கியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, உதயநிதி ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஐயா கே.எஸ்.அழகிரி ஆகியோருக்கு மட்டும் சாத்தான்குளம் செல்வதற்குச் சிறப்பு அனுமதி எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது? 
 
மாவட்ட எல்லையைக் கடப்பதற்கே அனுமதிச்சீட்டுத் தேவைப்படும் நிலையில் தொண்டர்கள் புடைசூழ 300 கிலோ மீட்டர் தாண்டிச் செல்வதற்கு எவ்வாறு அனுமதி கிடைத்தது? 
 
அத்தியாவசியப்பொருட்கள் வாங்க 2 கிலோ மீட்டர்வரை வாகனங்களைப் பயன்படுத்தாது நடந்துசெல்ல வேண்டும் எனக் கெடுபிடி நிலவும் மாநிலத்தில் சென்னையிலிருந்து சாத்தான்குளம் வரை எப்படிப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டது? 
 
தம்பி உதயநிதி அனுமதிச்சீட்டுப் பெறாமல்தான் பயணித்தார் எனக் குற்றஞ்சாட்டியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். சென்னையிலிருந்து வெளியூருக்குச் செல்பவர்களைக் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி அவர்களை  தனிப்படுத்தும் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது. 
 
அந்த நடைமுறை ஏன் கனிமொழி, உதயநிதி, அழகிரி பயணிக்கும் பொழுது கடைபிடிக்கவில்லை? சென்னையில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று அதிகரித்துவரும் வேளையில் மீண்டும் சென்னை திரும்பிய இவர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்களா? குறைந்தபட்சம் 14 நாட்கள் தனித்திருக்க அறிவுறுத்தப்பட்டார்களா? என கேள்வி எழுப்பியுள்ளார். 
 
ஆனால், உதயநிதி ஸ்டாலினோ உரிய அனுமதி வாங்கியே அங்கு சென்றதாக தனது டிவிட்டர் பக்கத்தில் இதற்கு பதில் அளித்துள்ளார்.