வேண்டியவர் என்பதால் விருது... ரஜினியை பாராட்டி பழித்த சீமான்
நடிகர் ரஜினிகாந்த் மத்திய அரசுக்கு வேண்டப்பட்டார் என்பதால் அவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது என சீமான் விமர்சித்துள்ளார்.
1975ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமான ரஜினிகாந்த் கடந்த 44 ஆண்டுகளில் 167 படங்களில் நடித்து முடித்துள்ளார். ரஜினிகாந்த் ஏற்கனவே பத்மபூஷன், பத்ம விபூஷன், செவாலியே விருது, பிலிம்பேர் விருது, தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது போன்ற பல விருதுகளை பெற்றிருந்த நிலையில் தற்போது அவருக்கு திரைப்படத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் இந்த விருது பெற்றதற்கு பலர் அவரை பாராட்டிய நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ரஜினியை பாராட்டிய கையோடு வம்பு இழுத்துள்ளார். சீமான் இது குறித்து கூறியதாவது,
ரஜினிக்கு விருது கொடுத்ததை பாராட்டுகிறேன். ஆனாலும் அவரை விட திரைத்துறையில் சாதித்த கமல், இளையராஜா, பாரதிராஜா உள்ளிட்டோர் திரைத்துறையில் இருக்கிறார்கள். ஆனால், ரஜினி அவர்களுக்கு வேண்டப்பட்டவர் என்பதால் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் ஏற்கனவே பாஜகவின் ஆதரவாளர் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தேர்தல் நெருங்கி வரும் நிலையிலும், ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்கவுள்ள நிலையிலும் இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.