1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 14 செப்டம்பர் 2022 (17:10 IST)

வருமானவரி சோதனை பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் - சீமான்

எஸ்.டி.பி.ஐ கட்சி அலுவலகத்தில் நடத்தப்பட்டுள்ள வருமானவரி சோதனை பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையே என சீமான் கண்டனம்.


இது குறித்து அவர் அறிக்கையில் வாயிலாக கூறியதாவது, எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடத்தி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை அரங்கேற்றியுள்ள பாஜக அரசின் எதேச்சதிக்காரச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

தன்னாட்சி அமைப்புகளைத் தனது கைப்பாவையாக மாற்றி சனநாயக அமைப்புகளையும், இயக்கங்களையும் அச்சுறுத்தி, அழித்தொழிக்கும் முயற்சியில் மோடி அரசு தொடர்ந்து ஈடுபட்டுவருவது நாட்டினை பேரழிவினை நோக்கி இட்டுச்செல்லவே வழிவகுக்கும்.

இதுபோன்ற அதிகார அத்துமீறல்களைத் தொடர்வதை இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு நிறுத்திக்கொள்வதோடு, அதலபாதாளத்திற்குப் போயுள்ள நாட்டின் பொருளாதாரத்தைச் சீரமைக்கவும், அதிகரித்துள்ள வேலையில்லா திண்டாடத்தைக் குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

இல்லையேல், இலங்கையில் மக்கள் புரட்சியினால், அந்நாட்டுக் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட நிலைமையை இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசாங்கமும் எதிர்கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.