1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : சனி, 27 ஜூன் 2015 (13:38 IST)

குமரி மாவட்டத்தில் திடீர் கடல் சீற்றம்: மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுந்ததால் பரபரப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டதால் 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் நீர் புகுந்துள்ளது.
 

 
கடல் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு தரப்பில் இதுவரை எந்த உதவியும் வழங்காததால் குமரி மீனவர்கள் கவலையில் உள்ளனர். தென்மேற்கு பருவமழையின் காரணமாக குமரி மாவட்ட தெற்கு கடற்கரை பகுதிகளில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
 
சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் வீடுகளுக்கு புகுந்ததால் நூற்றுக்காணக்கான மக்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தவிக்கின்றனர். சிலர் கிறிஸ்துவ ஆலயங்களிலும் உறவினர் வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர். 
 
நாகர்கோவில் அருகே உள்ள கிராமங்களில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்துள்ளது. எனினும் அரசு அதிகாரிகள் யாரும் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவோ உரிய நிவாரணம் வழங்க முன்வரவில்லை என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 
ஜுன் முதல் ஆகஸ்ட் வரை குமரியில் கடல் சீற்றம் ஏற்படுவது வழக்கம் இந்த ஆண்டு கடல் சீற்றத்தால் முன்னூர்துறை, தேங்காய் பட்டினம் உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
 
சீற்றத்தால் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்க கடற்கரைகளில் தூண்டில் வலைவுகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் மீனவ மக்கள் குறை கூறியுள்ளனர். இதனிடையே குமரி கடலில் சூறைக்காற்று வீசுவதால் விவேகானந்தர் பாறைக்கான படகு சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக கடலில் பல அடி உயரத்திற்கு அலைகள் எழும்புவதால் படகு சேவையை நிறுத்தி உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இதனால் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளூவர் சிலைக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் கன்னியாகுமரி படகு துறை வெறிச்சோடி போய் உள்ளது.