சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு பள்ளிகள் இன்று விடுமுறையா? முக்கிய அறிவிப்பு..!
கனமழை காரணமாக சென்னை உள்பட சில மாவட்டங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மழை நின்றுவிட்டதால், சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்ததால், சென்னையில் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டது. ஆனால் சென்னைக்கு வடக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க இருப்பதாக கூறப்படுவதால், சென்னைக்கு மழை ஆபத்து நீங்கியதாக செய்திகள் வெளியாயுள்ளன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று காலை நிலவரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிடலாம் என நேற்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்திருந்தது.
அந்த வகையில், சென்னையில் மழை ஆபத்து நீங்கியதையடுத்து இன்று பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்றும், அதேபோல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் இன்று செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று வழக்கம்போல் கிட்டத்தட்ட அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் செயல்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Edited by Siva