புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2019 (09:45 IST)

பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு இல்லை – சதயபிரதா சாஹூ !

பொன்பரப்பியில் தேர்தல் நாளன்று நடந்த தாக்குதலை அடுத்து மறு வாக்குப்பதிவு நடத்தப்படுமா என்ற கேள்விக்கு தமிழக தேர்தல் அதிகாரி பதிலளித்துள்ளார்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தேர்தல் நாளன்று பானை சின்னத்தில் வாக்களிப்பது தொடர்பாக அங்குள்ள இரு பிரிவு மக்களுக்கு இடையே பிரச்சனை எழுந்தது. அங்குள்ள தலித் மக்கள் தங்கள் வீட்டு சுவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவனின் சின்னமான பானை சின்னத்தை வரைந்திருந்ததால் அப்பகுதிக்குள் புகுந்த வன்னிய மக்கள் சிலர் வீடுகளை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த சில தலித் மக்களையும் தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.

இதையடுத்துப் பிரச்சனைக்குக் காரணம் பாமகவும் இந்து முன்னணியும்தான் என விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தெரிவிக்க பாமகவோ பாதிக்கப்பட்ட மக்கள் மீதே காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது.

தாக்குதலைக் கண்டித்து விசிக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கடந்த 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் மவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன் பொன்பரப்பியில் மறுவாக்குப்பதிவு நடத்தவேண்டும் எனக் கோரினார். இப்போது இதுகுறித்துப் பதிலளித்துள்ள தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு பொன்பரப்பியில் வாக்குச்சாவடிக்குள் எந்தவொருப் பிரச்சனையும் நடக்கவில்லை. அதனால் மறுவாக்குப்பதிவு நடத்த வாய்ப்பில்லை எனவும் அது சம்மந்தமாக தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சிகள் கோரிக்கை வைக்கவில்லை’ எனவும் தெரிவித்துள்ளார்.