Last Updated : திங்கள், 19 டிசம்பர் 2016 (15:30 IST)
'சசிகலா முதலமைச்சர் ஆகியே ஆக வேண்டும்' - அதிமுக அமைச்சர் அதிரடி
ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு சசிகலா முதல்மைச்சராக வேண்டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, ஜெயலலிதா வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியை அவரது தோழி சசிகலா ஏற்க வேண்டும் என்று அதிமுக தரப்பினர் கூறி வருகின்றனர். இதற்கு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜெயலலிதா பேரவை செயலாளரும் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் இன்று ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்திய பின் பேரவையின் மாநில, மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா பதவி ஏற்பதுடன் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்த ஆர்.கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும்போது அதில் போட்டியிட்டு சசிகலா முதலமைச்சராக வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், “புரட்சித் தலைவி ஜெயலலிதாவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர் சின்ன அம்மா சசிகலா. அவர் தியாகத்தின் வடிவமாக திகழ்ந்தார். ஒரு கோடி தொண்டர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக சசிகலா விளங்குகிறார்.
அவர் அதிமுக பொதுச் செயலாளர் பதவி ஏற்று கட்சியை வழி நடத்த வேண்டும். அதுமட்டுமின்றி சின்ன அம்மா சசிகலா ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு மகத்தான வெற்றி பெற்று முதலமைச்சராகவும் ஆக வேண்டும்” என்று கூறியுள்ளார்.