வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 24 செப்டம்பர் 2020 (11:25 IST)

என்னை பற்றி ஒரு தகவலும் வெளியே கசிய கூடாது.. கறார் காட்டும் சசிகலா!!

தன்னை பற்றிய எந்த வித தகவலையும் வெளியிடக்கூடாது என சசிகலா கர்நாடக சிறைக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று தற்போது பெங்களூர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, விரைவில் விடுதலை ஆவார் என்று அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது.  
 
சமீபத்தில் பெங்களூரு நரசிம்ம மூர்த்தி என்பவர் ஆர்டிஐ மூலம் சசிகலா விடுதலை குறித்து கேட்ட கேள்விக்கு கர்நாடக சிறை நிர்வாகம் பதிலளித்தது. அதாவது, பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வரும் ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆகிறார் எனவும் மேலும் அவர் ரூ.10 கோடி அபராத தொகையை கட்ட தவறினால் விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 
 
சசிகலா விடுதலை தொடர்பாக தகவல் அறியும் உரிமை தகவல் வெளிவந்ததும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டிடிவி தினகரன் டெல்லி சென்றது, அதிமுக - அமமுக இணைப்பு என தமிழக அரசியல் கடந்த சில நாட்களாக பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்து வருகிறது. 
 
இந்நிலையில் நேற்று டிடிவி தினகரன் சசிகலாவை சந்திக்கிறார் என செய்திகள் வெளிவந்த நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், தம்மை பற்றி விவரங்களை வழங்கக் கூடாது என கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர், என்னைப் பற்றிய தகவலை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் 3 ஆம் நபருக்கு வழங்க கூடாது. வழக்கில் தொடர்பில்லாத 3வது நபர்கள் விளம்பர, அரசியல் நோக்கில் விவரங்கள் கேட்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார். எனவே, சசிகலாவின் கடிததையடுத்து கர்நாடக சிறைத்துறை நிர்வாகம் 3 ஆம் நபர் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துள்ளது.