முதல்வரின் இந்த செயலை பாராட்ட வேண்டும்: சரத்குமார்
தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகளை மூட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா தமிழக மக்களுக்கு அளித்த வாக்குறுதியான, படிப்படியாக தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை முன்னிட்டு, முதலில் மதுக்கடைகளின் நேரத்தை குறைத்த முதல்வர் ஜெயலலிதா தற்போது கடைகளின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையை சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பாராட்டியுள்ளார். இது குறித்து சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வரின் படிப்படியான பூரண மது விலக்கு அறிவிப்பை வெறும் கண்துடைப்பு என்று தேர்தல் நேரத்தில் போட்டிப் போட்டுக் கொண்டு பிரச்சாரம் செய்தது எதிர்கட்சிகள்.
எதிர் கட்சிகள், 30 நாட்களுக்குள் தமிழகம் முழுவதிலும் உள்ள கடைகளில் 500 கடைகளை தேர்ந்தெடுத்து அவற்றை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்து அதனை உடனடியாக அமுலுக்கு கொண்டுவந்திருக்கும் முதல்வரின் இந்த செயலை பாராட்ட வேண்டும்.
உடனடி சான்றிதழ்கள் மூலம் கடைகள் மூடப்படுவது ஊர்ஜிதப்படுத்தப் படுத்தப்படுவதும் அங்கு பணி புரிந்தவர்களுக்கு மாற்று பணிக்கான நடவடிக்கைள் எடுப்பதும் பாராட்டுக்குரியது. இந்த துரித செயல்பாடுகள் முதல்வர் தேர்தல் நேரத்தில் பேசியது போல முதல்வர் சொன்னதையும் செய்வார், சொல்லாததையும் செய்வார் என்ற பெரும் நம்பிக்கையை மக்களுக்கு தரும்.
மது விலக்கை தமிழகத்தில் நிறைவேற்ற எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எனது மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.