முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் அபராதம்: சென்னை காவல்துறை எச்சரிக்கை
முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் அபராதம்
மத்திய அரசு கடந்த மார்ச் 24ஆம் தேதி அறிவித்திருந்த நாடு முழுவதுமான ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் மே மாதம் 3ஆ, தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கும் என சற்று முன்னர் பிரதமர் மோடி அவர்கள் அறிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம். மேலும் ஏப்ரல் 20ஆம் தேதி வரை முக்கிய கட்டம் என்பதால் ஊரடங்கு உத்தரவை அனைவரும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்
இந்த நிலையில் சென்னையில் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து சென்னையில் முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் 500 ரூபாய் அபராதம் என்றும் முகக் கவசம் அணியாமல் வருபவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது
அதுமட்டுமின்றி வீட்டை விட்டு வெளியே வருபவர்கள் அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்றும் மாஸ்க் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வருபவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை கூறியுள்ளது. எனவே விட்டு வெளியே வருபவர்கள் நடந்து சென்றாலும் சரி, வாகனத்தில் சென்றாலும் சரி கண்டிப்பாக மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது